ஜி.டி.நாயுடு, பொள்ளாச்சி என்.மகாலிங்கம் குறித்த கட்டுரைப் போட்டி: வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசு - `தி இந்து’, ‘வசந்த் அன் கோ’ இணைந்து நடத்தின

`தி இந்து’ மற்றும் ‘வசந்த் அன் கோ’ இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா கோவையில் நேற்று நடைபெற்றது.

கொங்கு மண்டலத்தில் பிறந்து வளர்ந்து பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து மண்ணுக்கு பெருமை சேர்ந்த பொள்ளாச்சி என்.மகாலிங்கம், `இந்தியாவின் எடிசன்’ என அழைக்கப்படும் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு ஆகியோரில் ஒருவர் குறித்து கட்டுரை எழுதி அனுப்புமாறு கடந்த பிப்ரவரி மாதம் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அனுப்பிய 4,800 கட்டுரைகளில் மிகச்சிறந்த 6 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன. அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட சிறந்த கட்டுரைகளுக்கு பரிசளிப்பு விழா, கோவை அவிநாசி சாலை சி.ஐ.டி. கல்லூரியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் வசந்த் அன் கோ நிறுவனர் வசந்தகுமார், பொள்ளாச்சி என்.மகாலிங்கத்தின் மகள் கருணாம்பாள் வானவராயர், விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் பேரன் ஜி.டி.ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு, சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியர் கே.அசோகன் வரவேற்று பேசியதாவது: நாளிதழில் வெளியிடப்படும் செய்திகள் குழந்தைகளுக்குகூட தவறான எண்ணங்களை உருவாக்கிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் தரும் செய்திகள், பல பள்ளிகளில் இடைவேளையின்போது படித்துக் காண்பிக்கப்படுகிறது. அந்த செய்திகளை வைத்து கலந்துரை யாடல் நடத்தப்படுகிறது. அது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தருகிறது.

நாங்கள் சரியான பாதையில்தான் சென்று கொண்டு இருக்கிறோம் என்பதையே இது காட்டுகிறது. அதுவே எங்களுக்குக் கிடைத்த வெற்றி. பெரிய மனிதர்களின் வாழ்க்கையை பற்றி மாணவர்கள் தங்களுக்கு தெரிந்த விஷயங்களை பதிவாக்கி அவர்களை எழுத வைப்போம். பரிசு என்பதைவிட அவர்களை ஊக்கப்படுத்துவதன் மூலம் மாணவர்களை வெற்றி யாளர்களாக உருவாக்க முடியும் என்பதற்காக போட்டியை நடத்தி னோம். அதற்கு, வசந்த் அன் கோ நிறுவனர் வசந்தகுமாருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

ஒரு தொலைக்காட்சியில் சினிமா போட்டி வைத்திருந்தால்கூட 1,500 பேர் கலந்து இருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஆனால், இந்த கட்டுரைப் போட்டியில் அதுவும் கோவை மாவட்டத்தில் மட்டும் 4,800 பேர் பங்கேற்று இருக்கிறார்கள் என்றால் அது ஜி.டி.நாயுடு, என்.மகாலிங்கம் ஆகியோர் மீது மக்கள் கொண்டுள்ள மரியாதையை பிரதிபலிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், `தி இந்து’ நாளிதழ் பொது மேலாளர் (நிர்வாகம்) பாலசுப்ரமணியம் தொகுப்புரை வழங்கினார். ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இணைப்பிதழ்களின் ஆசிரியர் அரவிந்தன் ஏற்புரை வழங்கினார். விளம்பரப் பிரிவு மண்டல துணை மேலாளர் வெங்கடசுப்ரமணியன் நன்றி கூறினார். `தி இந்து’ தமிழ் நாளிதழ் வர்த்தக பிரிவு தலைவர் சங்கரசுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE