அதிமுக அரசைக் கண்டித்து முக்கிய நகரங்களில் திமுக கண்டனக் கூட்டம்

கடந்த திமுக ஆட்சியின்போது தமிழகத் தின் முக்கிய நகரங்களில் அரசுக்கு எதிராக அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்தினர். அதே பாணியில் தற்போது அதிமுக அரசுக்கு எதிராக கண்டனக் கூட்டங்களை நடத்த திமுக தலைமை முடிவெடுத்துள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு ஒன்பது மாதங்கள் முன்பாக 2010 ஜூலை 13-ல் கோவையில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தினார் ஜெயலலிதா. அப்போதைய திமுக அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட் டத்தில் பெரும் திரளாக கூட்டம் கூடியது. இது ஆளும் கட்சிக்கு எதிரான மக்களின் நாடித் துடிப்பாகவும் பார்க்கப்பட்டது. அதேநேரம், கோவையைத் தொடர்ந்து திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டு திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார் ஜெயலலிதா. இந்த உத்தி தேர்தலில் அவருக்கு நல்ல பலனைக் கொடுத்தது.

தற்போது திமுக-வும் அதேபோல் முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தி அரசுக்கு எதிரான மக்களின் மனநிலையை அறிய திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக ‘தி இந்து’விடம் திமுக-வின் தலைமைக் கழக நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ஆளும் கட்சிக்கு எதிராக மவுனப் புரட்சிக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மக்களை ஒரு முகப்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் திமுக-வுக்கு இருக்கிறது. அதற்காக தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஆளும் கட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்துவது எனவும் கருணாநிதியின் பிறந்த நாளுக்கு முன்னதாக மே மாதத்தில் தமிழகத்தின் முக்கிய நகரத்தில் முதலாவது ஆர்ப்பாட்டத்தை நடத்துவது எனவும் கட்சியின் தலைமைக் கழகத்தால் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டங்களில் கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இது தொடர் பாக கலந்தாலோசிப்பதற்காக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஏப்ரல் 24-ல் சென்னையில் கூடுகிறது.

அதில் ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டக் கூட்டங்களை எந்தெந்த நகரங்களில் நடத்துவது, எப்படி நடத்துவது உள்ளிட்ட விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இவ்வாறு அந்த நிர்வாகி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE