காற்று மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

காற்று மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் மழையும், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்தீவுகள் மற்றும் கர்நாடகம் அருகே உருவாகியுள்ள காற்று மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இது மேலும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் குறிப்பாக உள் மாவட்டங்களில் மழை அதிகரிக்கும். எனவே அடுத்த 3 நாட்களில் வெப்பம் சற்று தணியலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை ஆகிய இடங்களில் 5 செ.மீ. , நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 4 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, திருவாரூர் மாவட்டம் குடவாசல், தருமபுரி மாவட்டம் பென்னாகரம், நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.

எனினும் வெயிலின் தாக்கம் பல மாவட்டங்களில் குறையவில்லை. திருச்சியில் 38.7 டிகிரி, மதுரையில் 38.6 டிகிரி, கரூரில் 38.5 டிகிரி, திருப்பத்தூரில் 38 டிகிரி, சேலத்தில் 37.3 டிகிரி, வேலூரில் 35.9 டிகிரி வெயில் பதிவாகியிருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE