சாலையில் நடந்து சென்ற முதியவர்கள் 2 பேரை தாக்கி பூணூல் அறுப்பு: 6 பேர் கைது

By செய்திப்பிரிவு

மயிலாப்பூர், அசோக் நகரில் சாலையில் நடந்து சென்ற இரு முதியவர்கள் தாக்கப்பட்டு, பூணூல் அறுக்கப்பட்டது.

சென்னை மயிலாப்பூர் முண் டகக்கண்ணியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விஸ்வநாத குருக்கள்(76). இவர் நேற்று முன் தினம் இரவில் மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோயில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிள் களில் வந்த 6 பேர் விஸ்வநாத குருக்களை வழிமறித்து தாக்கினர். இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். அப்போது கும்பலை சேர்ந்த ஒருவர் விஸ்வநாத குருக்கள் அணிந்திருந்த பூணூலை அறுத்து, சாலையில் வீசினார். பின்னர் பெரியார் வாழ்க என கோஷமிட்டுவிட்டு அந்தக் கும்பல் தப்பிச் சென்றது.

இந்த சம்பவம் குறித்து விஸ்வ நாத குருக்கள் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். உடனே விசாரணையில் ஈடுபட்ட போலீஸார் மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதிகளை சேர்ந்த நந்தகுமார், பிரபாகர், திவாகர், பிரதீப், ராவணன், அருண்குமார் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

இவர்கள் மீது கும்பலாக கூடுதல், அவதூறாக பேசி தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 6 பேரும் திராவிடர் விடுதலைக் கழகம் எனும் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மற்றொரு சம்பவம்

அசோக் நகர் சத்திய பெருமாள் கோயிலில் பஜனை பாடுபவர் சந்தானகோபால்(69).

நேற்று முன்தினம் இரவு கோயில் அருகே நடந்து சென்ற சந்தானகோபாலை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வழிமறித்து, அவர் அணிந்திருந்த பூணூலை அறுத்து சாலையில் வீசிவிட்டு சென்றனர்.

பாஜக கண்டனம்

பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட் டுள்ள அறிக்கையில், “முதிய வரைத் தாக்கி, பூணூலை அறுத்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. மதம் மற்றும் கடவுள் நம்பிக்கைகள் அவரவர் விருப்பு வெறுப்புகளை பொறுத்தது. மற்றவர்களின் உணர்ச்சிகளுடன் விளையாடு வதை இனியும் தொடரக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துக்கு மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ண னும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

போலீஸார் கடும் எச்சரிக்கை

சென்னை மாநகர காவல் அதிகாரி ஒருவர் கூறும்போது, "தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்துவதாக இருந்த பெண்களுக்கு தாலி தேவையா என்ற விவாத நிகழ்ச்சியை மையமாக வைத்து இந்து அமைப்புகள் பிரச்சினை செய்தன. அதைத் தொடர்ந்து இந்து அமைப்பினரும், பெரியாரின் பெயரில் இயங்கும் அமைப்பினரும் பல்வேறு வகைகளில் சென்னை நகரின் சட்டம்-ஒழுங்கை கெடுக்கின்றனர்.

வெடிகுண்டு வீசுவது, தாலி அகற்றுவது, முதியவர்களின் பூணூல் அறுப்பது, கோஷ்டியாக மோதுவது என பொது மக்களின் அமைதியை தொடர்ந்து கெடுக்கின்றனர். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் சட்டத்தில் இடம் இருக்கிறது. இனிமேல் மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடு படும் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்". என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE