ஆசிரியர்களுடன் பேச்சு நடத்தாமல் அரசு தூங்குகிறது: ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

'15 அம்ச கோரிக்கைகளுடன் போராடிக்கொண்டிருக்கும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் அதிமுக அரசு கும்பகர்ணன் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது' என்று திமுக பொருளாளர் ஸ்டாலிம் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து இன்று ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில்,''ஆசிரியர்களின் கூட்டமைப்பான "ஜாக்டோ" 15 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து போராடிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக ஆறாவது சம்பளக் கமிஷனின் பரிந்துரைப்படி தமிழக ஆசிரியர்களுக்கு சம்பளம், ஒப்பந்த அடிப்படையில் உள்ள ஆசிரியர்களின் பணி வரன்முறை செய்து அவர்களுக்கு சம்பளம் வழங்குவது உள்ளிட்ட 15 முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து மார்ச் 8ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பேரணி நடத்தினார்கள்.

பிறகு ஏப்ரல் 19-ம் தேதி 32 மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். இந்த நாட்டின் எதிர்கால தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டு தீர்த்து வைக்க வேண்டியது நம் கடமையாகும். போராடிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், அதிமுக அரசு கும்பகர்ணன் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது.

பல்வேறு கோரிக்கைகளுக்காக ஆசிரியர்கள் நடத்தும் இந்த போராட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆதரிக்கிறேன். ஆசிரியர்களை எந்தவித தாமதமும் இன்றி உடனே அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கைகளுக்கு தீர்வு காணுமாறு நான் அதிமுக அரசை வலியுறுத்துகிறேன்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE