கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்ட நபர்களை காப்பாற்ற தமிழக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற தமிழக அரசு முயற்சி செய்கிறது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

கிரானைட் முறைகேடுகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சகாயம் குழுவுக்கு வீடியோ படம் எடுத்து கொடுத்துக் கொண்டிருந்த பார்த்தசாரதி என்பவர், திடீரென கார் விபத்தில் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சகாயம் குழு, விசாரணையைத் தொடங்கிய நாள் முதல் பல்வேறு மிரட்டல்களைச் சந்தித்து வருகிறது.

விசாரணையைத் தொடர்ந்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என அவருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்தது. சகாயம் குழு விசாரணை நடத்திக் கொண்டிருந்த பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் ஒருவர் நடமாடிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சகாயம் குழுவுக்கு உதவி செய்த தாசில்தார் ஒருவர் விபத்துக்குள்ளானார். இப் போது வீடியோ எடுத்த பார்த்தசாரதி கார் விபத்தில் சந்தேகமான முறையில் மரணமடைந்துள்ளார்.

இதையெல்லாம் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக் கிறது. இந்த விசாரணையில் ஆர்வம் காட்டாத தமிழக அரசு, கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டவர்களைக் காப்பாற்றவே முயற்சி செய்து வருகிறது. பார்த்தசாரதியின் மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும்.

அதோடு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சகாயம் மற்றும் அவரது குழுவினருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE