விவசாயிகள் ரயில் மறியல்: மார்க்சிஸ்ட் ஆதரவு

மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டித்து வரும் 9-ம் தேதி விவசாயிகள் நடத்தவுள்ள ரயில் மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறைக் குழுவை அமைக்க தமிழக அரசு பலமுறை வற்புறுத்திய பிறகும் மத்திய அரசு காலம்கடத்தி வருகிறது. இது காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிரான அணுகுமுறையாகும்.

இந்நிலையில், காவிரியின் குறுக்கே மேகேதாட்டு, ராசிமணல் ஆகிய இடங்களில் 2 அணை கள் கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிரானது. இதைத் தடுக்க வேண்டிய மத்திய அரசு மவுனமாக இருப்பது சரியல்ல.

காவிரியில் அணை கட்டுவதைக் கண்டித்து ஏப்ரல் 9-ம் தேதி விவசாயிகள் சங்கங்கள் சார்பில் நடக்கவுள்ள ரயில் மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கிறது.

நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை 2-வது முறையாக குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் வெளியிட்டிருப்பது விவசாயிகளிடம் இருந்து நிலத்தை அபகரிக்கவே வழி வகுக்கும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE