கோயம்பேடு மார்க்கெட்டில் மாம்பழ சீசன் தொடங்கியது

சென்னையில் ஆண்டுதோறும் ஏப்ரலில் தொடங்கி ஆகஸ்ட் வரை மாம்பழ சீசன் இருக்கும். அப்போது கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு அதிகப்படியாக ஆந்திராவில் இருந்து மாம்பழங்கள் வரும். அடுத்தபடியாக கர்நாடகத்தில் இருந்தும், தமிழகத்தின் சேலம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மாம்பழங்கள் கொண்டுவரப்படும். தற்போது சீசன் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து மாம்பழ வியாபாரியும், கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக் குழு உறுப்பினருமான பாரூக் கூறியதாவது:

தற்போது ஆந்திராவில் இருந்து மட்டுமே மாம்பழங்கள் வருகின்றன. கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மே 2-வது வாரத்தில் பழங்கள் வரத் தொடங்கும்.

6 வகையான மாம்பழங்கள் மட்டுமே தற்போது வருகின்றன ஒரு கிலோ பங்கனப் பள்ளி பழம் ரூ.60-க்கு விற்கப்படுகிறது. கோவா ரூ.78, மல்கோவா ரூ.60, ஹிமாயத் ரூ.80, செந்தூரா மற்றும் பீத்தர் ரூ.40 என்ற விலையில் விற்கப்பட்டு வருகின்றன. மே 2-வது வாரம் முதல் ஜூன் மாதம் முடிய பல்வேறு வகை மாம்பழங்களின் வரத்து அதிகமாக இருக்கும். அப்போது விலையும் குறைவாக இருக்கும்.

கடந்த 2 வாரங்களாக நாளொன்றுக்கு 10 டன்னாக இருந்த மாம்பழ வரத்து, தற்போது 30 டன்னாக உயர்ந்துள்ளது. சில வாரங்களில் இது 100 டன் வரை உயர வாய்ப்புள்ளது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE