சென்னையில் தறிகெட்டு ஓடிய தண்ணீர் லாரி மோதி பைக்கில் வந்த தம்பதி, குழந்தை உட்பட 5 பேர் பலி: மற்றொரு விபத்தில் குப்பை லாரி மோதி 2 மாணவர் உயிரிழப்பு

சென்னை பல்லாவரம் சந்தையில் தறிகெட்டு ஓடிய தண்ணீர் லாரி மோதியதில் பைக்கில் வந்த தம்பதி, குழந்தை உட்பட 5 பேர் பலியாயினர்.

சென்னை பல்லாவரத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சந்தை நடப்பது வழக்கம். பாத்திரம், இரும்புப் பொருள், தானியம், பருப்பு வகைகள் தொடங்கி கம்ப்யூட்டர், உதிரிபாகங்கள் வரை அனைத்து பொருட்களும் கிடைக்கும் என்பதால் கூட்டம் அதிகம் இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து ஏராளமானோர் பைக், கார்களில் வந்து பொருட்களை வாங்கிச் செல்வார்கள்.

பரங்கிமலை கன்டோன்மென்ட் நிர்வாகம் சார்பில் சந்தையில் 3 குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. நேற்று காலை 11 மணி அளவில் அந்த தொட்டிகளில் தண்ணீரை நிரப்பிவிட்டு ஒரு லாரி புறப்பட்டது. தவறான பாதையில் தாறுமாறாக செல்லத் தொடங்கிய லாரி, சந்தைக்குள் வந்த கார் மீது முதலில் மோதியது. அருகே நின்றிருந்தவர்கள் அலறி ஓடினர். ஆனாலும், நிற்காத லாரி தொடர்ந்து தறிகெட்டு ஓடியது.

சந்தை நுழைவாயிலில் டோக்கன் போடும் 20 வயது இளைஞர் இதை பார்த்துவிட்டு, ‘இந்த பக்கமாக வரக்கூடாது’ என்று கைகாட்டியபடி லாரியை நிறுத்த முயன்றார். கட்டுப்பாட்டை இழந்த லாரி, அவர் மீதும் மோதியது. சம்பவ இடத்திலேயே அந்த இளைஞர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

அதன் பிறகும் வேகம் குறையா மல் சென்ற லாரி, எதிரே வந்த மகேஷ் என்பவரது பைக் மீது மோதியது. தனியார் நிறுவனத்தில் வேலை பார்க் கும் மகேஷ் (29), பல்லாவரம் பத்ம நாபா நகர் சம்பந்தம் தெருவை சேர்ந் தவர். தனது தாய் சரோஜா (65), மனைவி பிரீத்தி (24), இரண்டரை வயதுக் குழந்தை தியா ஆகியோரையும் அழைத்துக் கொண்டு, சந்தையை நோக்கி பைக்கில் வந்துகொண்டிருந்தார்.

மோதிய வேகத்தில், லாரி சக்கரத்தின் அடியில் பைக் சிக்கியது. இதில், மகேஷின் மனைவி ப்ரீத்தி ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

உயிருக்கு போராடிக் கொண்டி ருந்த மகேஷ், அவரது தாய், குழந்தை ஆகியோரை பொதுமக்கள் உதவி யுடன் மீட்டு ஆம்புலன்ஸில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

வழியிலேயே மகேஷ் பரிதாபமாக இறந்தார். மருத்துவமனையில் சேர்க் கப்பட்ட சரோஜா, குழந்தை தியாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இரு வரும் சிறிது நேரத்தில் உயிரிழந்தனர்.

கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லாரி மோதியதில் கணவன், மனைவி, குழந்தை, பாட்டி என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மற்றும் ஒரு இளைஞர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து தொடர்பாக லாரி டிரைவர் சுரேஷ் (34) என்பவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தை நுழைவாயிலில் டோக்கன் போடும் இளைஞரின் பெயர் மற்றும் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

குப்பை லாரி மோதி 2 பேர் பலி

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த மாணவர்கள் வசந்த்குமார், யுவராஜ், பிரேம்நாத். வியாசர்பாடியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று 10-ம் வகுப்பு கடைசி தேர்வு எழுதிவிட்டு 3 பேரும் பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

வியாசர்பாடி மேல்பட்டி பொன்னப்பன் தெரு அருகே சென்றபோது, எதிரே வந்த குப்பை லாரி எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் வசந்த்குமார், யுவராஜ் ஆகியோர் பலியாயினர். படுகாயம் அடைந்த பிரேம்நாத், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து குப்பை லாரி ஓட்டுநர் சங்கர் (28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE