தமிழர்களுக்கு உரிமைகள் வழங்கிய ‘சிங்கப்பூரின் தந்தை’ லீ குவான் யூ-வுக்கு மன்னார்குடியில் மணிமண்டபம் - ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்ட பொதுமக்கள் ஏற்பாடு

By வி.தேவதாசன்

சிங்கப்பூரின் தந்தை என்று அழைக்கப்படும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ நினைவாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ரூ.1 கோடி செலவில் மணிமண்டபம் கட்ட அப்பகுதி மக்கள் தீர்மானித்துள்ளனர்.

சிங்கப்பூர் நாட்டுடன் தமிழக மக்களுக்கு மொழி ரீதியாகவும், பண்பாடு, கலாச்சார ரீதியாகவும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. கரடுமுரடாக இருந்த சிங்கப்பூரை உலகின் மிகச் சிறந்த நாடுகளில் ஒன்றாக மாற்றியவர் லீ குவான் யூ. அவரது அந்தப் பணிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் தமிழர்கள்.

அதனால்தான் தமிழ் ஆட்சி மொழி என்பது உட்பட சீனர் களுக்கு இணையான பல உரிமைகளை தமிழர்களுக்கும் லீ வழங்கினார்.

அந்நாட்டில் வசிக்கும் தமிழர் களில் பெரும்பகுதியினர் மன்னார் குடி, பட்டுக்கோட்டை பகுதி களைச் சேர்ந்தவர்கள். இங்குள்ள பரவாக்கோட்டை, கூப்பாச்சிக் கோட்டை, திருமக்கோட்டை, உள்ளிக்கோட்டை, மேலத்திருப் பாலக்குடி, கீழத்திருப்பாலக்குடி, ஆலங்கோட்டை, நெடுவாக் கோட்டை, மேலவாசல் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சிங்கப்பூருடன் தொடர்பு உண்டு. இந்தக் கிராமங்களில் இருந்து சிங்கப்பூர் சென்று வராதவர் களை விரல்விட்டு எண்ணி விடலாம்.

கட்டுமானத் தொழிலாளர், துறைமுகப் பணியாளர், வணிக நிறுவனங்களில் விற்பனையாளர், கோயில் பணியாளர் என சாதாரண பணிகள் முதல் மென்பொருள் பொறியாளர்கள் உள்ளிட்ட எல்லா விதமான பணிகளிலும் இந்தப் பகுதி மக்கள் அதிகம் உள்ளனர். ஏராளமானோர் நிரந்தர குடியுரிமை பெற்று அந்த நாட்டிலேயே வசித்து வருகின்றனர். இதனால், சிங்கப்பூருக்கும் மன்னார்குடிக்கும் இடையே திருமணத்துக்கு பெண் எடுப்பது, கொடுப்பது போன்ற கலாச்சார நிகழ்வுகளும் மிகச் சாதாரணமாக நடந்து வருகின்றன.

சிங்கப்பூரின் சமூக, பொருளா தாரத் துறைகளில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்தின் அசைவை யும் மன்னார்குடி பகுதியில் உணர முடியும். மன்னார்குடி பகுதியில் இன்று நடக்கு பல வணிக நடவடிக்கைகளுக்கு தேவையான முதலீடு சிங்கப்பூரில் இருந்தே கிடைக்கிறது. அந்நாட்டின் நாணய மான டாலர் மதிப்பு உயர உயர, மன்னார்குடி பகுதி மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்து கொண்டே வந்திருக்கிறது.

இந்தச் சூழலில் சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ, கடந்த மார்ச் 23-ம் தேதி காலமானார். அவரது மறைவு சிங்கப்பூர் தமிழர்கள் மட்டுமின்றி, மன்னார்குடி பகுதி மக்களிடமும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இங்குள்ள பல கிராமங்களில் லீ மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான டிஜிட்டல் பேனர்களை வைத்திருந்தனர்.

மார்ச் 29-ம் தேதி மன்னார்குடி நகரில் நடந்த இரங்கல் ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அந்த ஊர்வலத்தின் இறுதியில் லீ குவான் யூ நினைவாக மன்னார்குடியில் மணிமண்டபம் கட்டுவது என தீர்மானிக்கப்பட்டது.

சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் இந்த மணிமண்டபத்தைக் கட்ட முடிவு செய்துள்ளனர். இதற் காக 4 பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலத்திருப் பாலக்குடி ஆர்.ரவீந்திரன், திருமக் கோட்டை எஸ்.ரஞ்சித்குமார், மேலநத்தம் எஸ்.பாண்டி மற்றும் சுந்தரக்கோட்டையைச் சேர்ந்த பத்திரிகையாளர் எம்.துரை ஆகி யோர் அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

மணிமண்டபம் கட்டும் திட்டம் குறித்து குழுவினர் கூறியதாவது:

குறைந்தபட்சம் 10 ஆயிரம் சதுர அடி முதல் அதிகபட்சம் 1 ஏக்கர் வரை இந்தப் பணிக்காக நிலம் தேடி வருகிறோம். இன்னும் ஒரு மாதத்துக்குள் இதற்காக ஒரு அறக்கட்டளையை அமைத்து பதிவு செய்ய உள்ளோம். அந்த அறக்கட்ட ளையில் 100 உறுப்பினர்கள் இருப்பர். ஒவ்வொருவரும் தலா ரூ.1 லட்சம் பங்குத் தொகையாக செலுத்துவர். உறுப்பினர்களில் இருந்து 10 பேர் அறக்கட்டளை நிர்வாகிகளாக தேர்வு செய்யப்படுவர்.

மணிமண்டபத்தில் சிங்கப்பூர் மற்றும் லீ குவான் யூ வரலாறு குறித்த புகைப்படக் கண்காட்சி நிறுவப் படும். சிங்கப்பூர் முன்னேற்றத்தில் தமிழர்களின் பங்கு மற்றும் மன்னார் குடி பகுதி மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவை குறித்த காட்சிப் படங்களும் இடம் பெறும். சிங்கப்பூர் வளர்ச்சியின் மூலம் நமது இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து குறும்படங்கள் தயாரிக்கப் படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மணிமண்டபம் அமைக்க வேண்டியதன் அவசியம் என்ன என்று கேட்டபோது, ‘‘மன்னார்குடி பகுதியில் உள்ளவர்களில் பலரை வாழ வைத்த நாடு சிங்கப்பூர். அதற்கு காரணமான லீ குவான் யூ, எங்களை வாழ வைத்த தெய்வம். அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலேயே மணிமண்டபம் கட்ட தீர்மானித்துள்ளோம். அவரால் பயனடைந்தவர்கள் இந்தப் பகுதியில் ஏராளமானோர் உள்ளதால் ரூ.1 கோடி நிதி திரட்டுவது என்பது மிகவும் எளிதானது’’ என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE