தி.மலையில் 6 சடலங்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனை பிணவறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 6 தொழி லாளர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறைக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆந்திராவில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 20 பேரின் உடல்கள் கடந்த 8-ம் தேதி அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர், தொழிலாளர்களின் சொந்த ஊர்களுக்கு உடல்கள் கொண்டுவரப்பட்டன.

அதில், திருவண்ணாமலை மாவட்டம் காளசமுத்திரம் பழனி, ஜவ்வாதுமலை மேல்குப்சானூர் கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் உடல்கள், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் உடல்கள் மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரது உடல் உட்பட 14 பேரது உடல்களுக்கு நேற்று முன்தினம் இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. அதே நேரத்தில், திருவண்ணாமலை மாவட்டம் வேட்டகிரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார், முருகன், பெருமாள், காந்திநகர் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன், முருகாப்பாடி கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி, மூர்த்தி ஆகியோர் உடல்களுக்கு இறுதிச் சடங்கு நடக்கவில்லை.

அவர்களது உடல்கள் சிதைக்கப்பட்டு இருப்பதால், மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பாலு மூலமாக அவர்களது குடும்பத்தினர் நேற்று முன்தினம் வழக்கு தொடர்ந்தனர். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்களைப் பாதுகாக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, 6 உடல்கள், தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இரவு 11 மணியளவில் கொண்டுவரப்பட்டு, பிணவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த வழக்கு தங்கள் வரையறைக்குள் வராது என்று சுட்டிக் காட்டி, வழக்கை வரும் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்த உயர் நீதிமன்றம், அதுவரை, 6 உடல்களை பாதுகாக்க உத்தரவிட்டது. இதையடுத்து, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE