காவல் நிலையத்தில் 7 வாக்கி டாக்கிகள் திருட்டு: அதிகாரிகள் தீவிர விசாரணை

தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இருந்த 7 வாக்கி டாக்கிகளை திருடி சென்றவர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.

சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையத்தின் பின்புறம் போக்குவரத்து காவல் பிரிவும் இயங்கி வருகிறது. தகவல்கள் பரிமாற்றத்திற்கு ‘வாக்கி டாக்கி' கருவிகளை போலீஸார் பயன்படுத்துகின்றனர். போக்குவரத்தை சரிசெய்ய மற்றும் வாகன சோதனைக்கு காவலர்கள் செல்லும்போது வாக்கி டாக்கியை எடுத்து செல்வார்கள். வாக்கி டாக்கியை எடுத்துச்செல்லும் நேரத்தையும், திருப்பி கொண்டுவந்து வைக்கும் நேரத்தையும் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பாரா புத்தகத்தில் பதிவு செய்து, எடுத்துச் செல்லும் நபரின் விவரங்களையும் எழுதி கையெழுத்திட வேண்டும்.

இந்த பணிக்கென தனியாக ஒரு காவலர் இருப்பார். நேற்று முன்தினம் இரவில் பணிக்கு சென்ற காவலர்கள் எடுத்துச்சென்ற வாக்கி டாக்கிகளை தவிர மீதமிருந்த 7 வாக்கி டாக்கிகள் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன. அந்த 7 வாக்கி டாக்கிகளும் சார்ஜ் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. நேற்று காலையில் போக்குவரத்து போலீஸார் வந்து வாக்கி டாக்கிகளை தேடியபோது 7 வாக்கி டாக்கிகளையும் காணவில்லை. நிலையத்தின் அனைத்து இடங்களில் தேடியும் அவை கிடைக்கவில்லை. அதன் பின்னரே அவை திருடப்பட்டிருப்பதை போலீஸார் அறிந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து காவல் துணை ஆணையர் லட்சுமி தேனாம்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்திற்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினார்.

வாக்கி டாக்கிகளை வௌியாட்கள் திருடி சென்றார்களா? அல்லது ஏதாவது ஒரு போலீஸ் காரரே எடுத்து மறைத்து வைத்திருக்கிறாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE