ஈஸ்டர் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து

இன்று ஈஸ்டர் பண்டிகை (ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள்) உலகம் முழுக்க கொண்டாடப் படுகிறது. இதையொட்டி கிறிஸ்தவ மக்களுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜெயலலிதா (அதிமுக பொதுச் செயலாளர்):

பகைவர்களையும் ரட்சிக்கும் பரந்த மனம் கொண்ட ஏசு பிரான், தம்மை சிலுவையில் அறைந்தவர்களைப் பார்த்து “தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள். இவர்களை மன்னியும்” என்று இறைவனிடம் வேண்டி, தனது எல்லையில்லா இரக்க குணத்தை உலகத்தாருக்கு உணர்த்தினார். அன்பே வாழ்வின் நெறி என வாழ்ந்து காட்டிய ஏசு பிரானின் போதனைகளை மக்கள் அனைவரும் பின்பற்றி ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டி ஒற்றுமையாக வாழ வேண்டும். கிறிஸ்தவ மக்களுக்கு எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்து கள்.

கருணாநிதி (திமுக தலைவர்):

கிறிஸ்தவ சமுதாய பெருமக்களைப் போற்றி, அவர்களின் நலம் பேணிட சலுகைகள் பல வழங்கி என்றும் அவர்களுக்குத் துணைபுரிந்து வருவது திமுகதான் என்பதை நினைவுபடுத்தி, இந்நன்னாளில் கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

டாக்டர் ராமதாஸ் (பாமக நிறுவனர்):

சிலுவையில் அறையப் பட்ட ஏசு எப்படி உயிர்த்தெழுந்தாரோ அதேபோல், தமிழகத்தில் சிலுவை யில் அறையப்பட்ட உண்மை, நேர்மை, நீதி, மக்களின் விழிப்புணர்வு ஆகியவை விரை வில் உயிர்த்தெழும். ஏசு பிரானின் உயிர்த்தெழுதல் பண்டிகையை கொண்டாடுகிற இந்த நன்னாளில் அவரைப் பின்பற்றி மற்றவர்கள் மீது அன்பு செலுத்தவும், பிறரை மன்னிக்கவும் கற்றுக்கொள்வோம்.

வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்):

சகிப்புத்தன்மைக்கும், சமய ஒற்றுமைக்கும் மதச்சார்பற்ற கொள்கைக்கும் அச்சுறுத்தல் தலைதூக்கி வரும் இன்றைய காலகட்டத்தில், ஏசு நாதரின் அமுத மொழிகளை நினைவில் கொண்டு மனிதநேயத்தையும், சமய நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க ஈஸ்டர் திருநாளில் உறுதியேற்போம். தரணியெங்கும் வாழும் கிறிஸ்தவ மக்களுக்கு ஈஸ்டர் நல்வாழ்த்துகள்.

விஜயகாந்த் (தேமுதிக தலைவர்):

உலகில் அமைதி நிலவ, மனிதநேயம் தழைக்க ஈஸ்டர் திருநாள் ஒரு இன்பத் திருநாளாக மலரட்டும். நம்மாலான உதவிகளை ஏழை எளியவர்களுக்கு செய்திட வேண்டும். ஏழைகளுக்கு செய்யும் தொண்டு இறைவனுக்கு செய்யும் தொண்டாகும் என்பது தேமுதிகவின் கொள்கை முழக்கம். ஏசு நாதர் உயிர்த்தெழுந்த இந்நன்னாளில் கிறிஸ்தவ சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகள்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்):

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு மத சிறுபான்மையினர் இடையே பாதுகாப்பற்ற சூழ்நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிறிஸ்தவர்களை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மதச்சார்பற்ற சக்திகளுக்கு உண்டு. கிறிஸ்தவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய இந்நாளில் உறுதியேற்போம். அனைத்து கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கும் ஈஸ்டர் நல்வாழ்த்துகள்.

மேலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், கொங்குநாடு ஜனநாயக கட்சி தலைவர் ஜி.கே.நாகராஜ் ஆகியோரும் கிறிஸ்தவ மக்களுக்கு ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE