மனைவி கொலைக்கு பழிக்கு பழியாக 4 பேரை கொன்ற தொழிலதிபர் 20 ஆண்டுக்கு பிறகு கைது: மாயமான 2-வது மனைவி எங்கே?

மனைவியை கொலை செய்த கூலிப்படையினர் மற்றும் இதன் பின்னணியில் இருந்த தன் தம்பி உட்பட 4 பேரை தொழிலதிபர் பழிக்கு பழியாக கொலை செய்தது 20 ஆண்டுகளுக்கு பிறகு தெரியவந்தது. இதையடுத்து, அவரும் அவரது பழைய நண்பரும் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கொருக்குப்பேட்டை இளைய முதலி தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (27). இவர் தனது தந்தை ராமச்சந்திரன் (55) காணாமல் போய்விட்டதாகவும் அவரை கண்டுபிடிக்குமாறும் கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி புகார் கொடுத்தார். 2 நாட்களுக்கு பிறகு, மீண்டும் காவல் நிலையம் சென்ற பிரகாஷ், தனது தந்தையை அன்பு ஞானதுரை என்பவர் கடத்திச் சென்றுவிட்டதாக கூறினார்.

இதையடுத்து, போலீஸார் விசா ரணையில் இறங்கினர். ராமச் சந்திரனின் செல்போன் தொடர்பு உதவியுடன் தேடியபோது, அவர் கொடுங்கையூரில் இருப்பது தெரியவந்தது. தொழிலதிபர் ஞானதுரையிடம் பணம் பறிக்க தந்தையும் மகனும் சேர்ந்து கடத்தல் நாடகம் நடத்துவதாக போலீஸுக்கு சந்தேகம் எழுந்தது. பிரகாஷை தீவிரமாக விசாரித்தனர். தலைமறைவாக இருந்த அவரது தந்தை ராமச்சந்திரனையும் பிடித்தனர்.

திடுக்கிடும் உண்மைகள்

இருவரையும் காவல் நிலை யத்துக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

கொருக்குப்பேட்டையை சேர்ந்த அன்பு ஞானதுரையும் ராமச்சந்திரனும் நண்பர்கள். ஞானதுரை வசதியான குடும்பத்தை சேர்ந்த தொழிலதிபர். 1995-ம் ஆண்டில் அவரது வீட்டில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்தது. அவரது வீட்டுக்குள் புகுந்த 7 பேர் கும்பல், ஞானதுரையின் மனைவி ஜான்சி ராணியை கத்தியால் குத்தி கொலை செய்து, 60 பவுன் நகைகள், ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது.

பணம், நகைக்காக நடந்த கொலை என இந்த வழக்கு முடிக்கப்பட்டது. இந்த வழக்கில் மாரியப்பன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டார். ராமச்சந்திரனின் நண்பர் முருகன் என்பவர் திருட்டு வழக்கில் கைதாகி அதே சிறைக்கு சென்றார். சிறையில் இருவரும் நண்பர்களாயினர்.

சொத்துப் பிரச்சினை

ஒருமுறை முருகனிடம் பேசிக் கொண்டிருந்த மாரியப்பன், ‘‘ஜான்சி கொல்லப்பட்டது திட்டமிட்டு நடந்த சம்பவம். திருட்டின்போது நடந்த கொலை அல்ல. அந்த கொலைக்கு ஞானதுரையின் தம்பி பால் அன்பழகன்தான் காரணம். சொத்துப் பிரச்சினை காரணமாக, அவர்தான் கூலிப்படை மூலம் ஜான்சியை கொலை செய்தார். அந்த கும்பலில் நானும் ஒருவன்’’ என்று கூறியுள்ளார்.

இந்த தகவல் முருகன் மூலம் ராமச்சந்திரனுக்கு தெரியவந்தது. அவர் இதை ஞானதுரையிடம் கூறினார்.

இந்நிலையில், 1996 ல் சிறை யில் இருந்து ஜாமீனில் வந்த மாரியப்பன் கொலை செய்யப் பட்டார். கூலிப்படையை சேர்ந்தவ ராக கூறப்படும் முத்து என்பவர் 1998-ல் கொல்லப்பட்டார். ஞான துரையின் தம்பி பால் அன்பழகன் 2002 ல் ஒரு கார் விபத்தில் இறந் தார். காரை மோதி அவரை கொலை செய்துவிட்டு விபத்துபோல நாடக மாடியது பின்னர் நடந்த விசாரணையில் தெரியவந்தது.

இந்த 3 கொலைகளின் பின்னணி யிலும் இருந்தது ராமச்சந்திரனும் ஞானதுரையும். அவர்கள் இருவரும் சேர்ந்து திட்டமிட்டு சிலரது உதவியுடன் இந்த கொலைகளை கச்சிதமாக முடித்துள்ளனர்.

சிறை நண்பன் மாரியப்பன் உட்பட 3 பேரையும் கொலை செய்தது ராமச்சந்திரனும், ஞான துரையும்தான் என்பதை முருகன் அறிந்துகொண்டார். இவர்கள் இருவரையும் மிரட்டி அடிக்கடி பணம் பறித்துள்ளார். இதைத் தொடர்ந்து, முருகனும் கொலை செய்யப்பட்டார். 4 கொலைகளையும் செய்து விட்டு இருவரும் எதுவும் தெரி யாததுபோல இருந்துவிட்டனர்.

பின்னர், மோதல் ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். இந்நிலை யில், ஞானதுரையிடம் பணம் பறிக்கும் திட்டத்துடன் ராமச்சந்திரன் கடத்தல் நாடகம் ஆடியிருக்கிறார். ஆனால், வசமாக சிக்கிவிட்டார்.

இவ்வாறு போலீஸார் கூறினர்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்குகளில் அனைத்து உண்மைகளும் வெளி வந்ததைத் தொடர்ந்து, ராமச் சந்திரன், அன்பு ஞானதுரை இருவரும் கைது செய்யப்பட்டனர்.

ஜான்சி கொல்லப்பட்ட பிறகு, 2-வதாக ஒரு பெண்ணை ஞானதுரை திருமணம் செய்துகொண்டார். சில மாதங்களாக அந்த பெண்ணையும் காணவில்லை. ஜான்சி கொலை வழக்கில் தொடர்புடைய கூலிப்படையில் மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்றும் தெரியவில்லை. இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE