இதர மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் உயர் கல்வி செல்வோர் எண்ணிக்கை அதிகம்: உயர் கல்வித்துறை செயலர் பெருமிதம்

By செய்திப்பிரிவு

இதர மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் உயர் கல்விக்கு செல்வோரின் எண்ணிக்கை மிகவும் அதிகம் என்று சென்னையில் நேற்று தொடங்கிய தொலைதூரக் கல்வி மாநாட்டில் உயர் கல்வித்துறை செயலர் அபூர்வா பெருமிதத்துடன் கூறினார்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் சார்பில் இந்திய தொலைதூரக் கல்வி சங்கத்தின் 20-வது மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த 3 நாள் மாநாட்டை தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலர் அபூர்வா தொடங்கிவைத்துப் பேசியதாவது:

தமிழக அரசு அதிக முன்னுரிமை அளிக்கும் துறைகளில் உயர் கல்வியும் ஒன்று. அதிலும் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு தகுதியை மேம்படுத்துவதுடன் கூடிய உயர் கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறது. இதர மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் உயர் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகம், அதேபோல், தமிழகத்தில் உயர்கல்விக்கு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகமாக (42 சதவீதம்) உள்ளது.

மேற்படிப்பு முடிப்பவர்களில் 50 சதவீதம் பேர் அஞ்சல்வழிக் கல்வித்திட்டத்தில் படித்தவர்களாக இருக்கிறார்கள். எனவே, அஞ்சல்வழிக் கல்வி திட்டம் மிகவும் முக்கியமானது. அஞ்சல்வழியில் படித்து அரசு வேலையில் சேர்ந்திருப்பவர்கள் ஏராளம். வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்க அஞ்சல்வழிக் கல்வித் திட்டம் பெரிதும் உதவும். அதேபோல், படிப்பை இடையில் நிறுத்தியவர்கள் படிப்பைத் தொடரவும், குடும்ப சூழ்நிலை காரணமாக படிக்க இயலாதவர்கள் படிக்கவும், மாற்றுத் திறனாளிகள் படிக்கவும் இத்திட்டம் உதவிகரமாக இருக்கிறது.

தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, அஞ்சல்வழி கல்வித் திட்டத்திலும் காணொளி மூலமாக பாடம் நடத்தப்படுவதால் ரெகுலர் படிப்புக்கு இணையானதாக அது மாறியுள்ளது.

இவ்வாறு அபூர்வா கூறினார்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியை சந்திரகாந்தா ஜெயபாலன் வரவேற்றுப் பேசுகையில், “உயர் கல்விக்கு செல்வோரின் எண்ணிக்கையில் சீனா, அமெரிக்கா நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. திறந்தநிலை கல்வித் திட்டத்தால் உயர் கல்வி செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்” என்று குறிப்பிட்டார். இந்த மாநாடு நாளை (சனிக்கிழமை) முடிவடைகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE