ஆந்திர போலீஸ் நடவடிக்கை மீது விஜயகாந்த் சந்தேகம்

ஆந்திர வனப்பகுதியில் தமிழர்களை மட்டும் சுட்டுக்கொன்றது தமிழர்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' 07.04.2015 அன்று ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நடந்த பகுதி திருப்பதி அருகே உள்ள சேஷாசலம் பகுதி ஒரு புண்ணிய ஸ்தலமாகும்.

இந்த கொடூரக்கொலையை ஒரு புண்ணிய ஸ்தலத்திலேயே நடத்தியிருப்பது பெரும் இழுக்காகும். இது போன்ற ஒரு கொடூர சம்பவம் யாருக்கும், எங்கேயும் நடக்கக்கூடாது. இந்த சம்பவத்தில் உயிர் இழந்தவர்கள் அனைவரும் தமிழர்கள் என்பது வேதனைக்குரியது.

இந்த சம்பவத்தில் நூற்றுக்கணக்கான ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்களும் ஈடுபட்டனர் என்பது பத்திரிகை மற்றும் ஊடகங்கள் மூலமாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இருபது தமிழர்களை சுட்டுக்கொன்றது தமிழர்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இந்த செம்மரகடத்தலில் ஈடுபடும் கடத்தல் மன்னன் ஆந்திராவை சேர்ந்தவர். இவர் சிறையில் இருந்துகொண்டே இது போன்ற செம்மர கடத்தலில் இவர்களை ஈடுபடுத்தி ரயில், கப்பல் மூலமாகவும் கடத்திக்கொண்டே இருக்கும் செய்தி செய்தித்தாளில் வெளிவந்துள்ளது. இதை காவல்துறை கண்காணித்து தடுக்காதது ஏன்?

காட்டில் உள்ள வனவிலங்குளை கூட சுட்டுக்கொல்லக்கூடாது என்பது சட்டம். ஆனால் குருவியை சுடுவது போல தமிழர்களை சுட்டு படுகொலை செய்திருப்பது எந்த விதத்தில் நியாயம்.

இந்த சம்பவத்தில் மத்திய அரசு தலையிட்டு உரிய விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய நிவாரணமும், உயிரிழந்த குடும்பத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் மத்திய அரசு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும். தவறு செய்த ஆந்திர காவல்துறையினர் மீது மத்திர அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE