மானிய விலை வைக்கோல் விற்பனை நிறுத்தம்: கால்நடைகளை பராமரிக்க முடியாமல் விவசாயிகள் அவதி

By கே.சுரேஷ்

தமிழக அரசின் மானிய விலை வைக்கோல் விற்பனை நிறுத்தப்பட்டிருப்பதால் கால்நடைகளை பராமரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கால்நடைகளுக்கு ஏற்படும் உலர் தீவன தட்டுப்பாட்டை போக்குவதற்காக தமிழ்நாடு முழுவதும் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் 125 உலர் தீவன விற்பனை மையங்களும், வருவாய்த் துறை சார்பில் 60 விற்பனை மையங்களும் அமைக்க 2013-ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா உத்தரவிட்டார்.

அதன்படி கடந்த ஆண்டு ஒவ்வொரு மையத்துக்கும் தலா ரூ.10 லட்சம் வீதம் கொள்முதல் செய்யப்பட்ட வைக்கோல், விவ சாயிகளுக்கு மானிய விலையில் கிலோ ரூ.2-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ஒரு மாட்டுக்கு 3 கிலோ வீதம் அதிகபட்சம் 5 மாடுகளுக்கு என வைக்கோல் வழங்கப்பட்டது.

5 மாடுகள் வைத்திருக்கும் விவ சாயிகளுக்கு வாரத்துக்கு 105 கிலோ வைக்கோல் வழங்கப்படும். இதை ஒரே நேரத்தில் வாங்கிச் செல்லலாம். இதற்கென பதிவு செய்துள்ள கால்நடை உரிமையாளர்களுக்கு தீவன அடையாள அட்டை வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை முடிந்து நெல் அறு வடைப் பணிகள் தொடங்கியதும் பிப்ரவரி மாதத்தில் ஒப்பந்தம் விடப்பட்டு அரசு மையங்களுக்கு வைக்கோல் கொள்முதல் செய்து விற்பனை செய்யப்பட்டது.

ஆனால், இந்த ஆண்டு அறுவடை முடிந்து சில மாதங்களாகி யும் அரசு இதுவரை வைக்கோல் கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால் வைக்கோல் விற்பனை நடைபெறவில்லை.

தற்போது கோடையின் தாக்கத் தில் புல், பூண்டுகளெல்லாம் கருகி விட்ட நிலையில், மானிய விலையில் வைக்கோல் கிடைக்காததாலும் பராமரிக்க முடியாததாலும் குறைந்த விலைக்கு மாடுகளை விற்பனை செய்வதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து இந்திய விவசாயி கள் சங்க புதுக்கோட்டை மாவட் டத் தலைவர் ஜி.எஸ்.தனபதி கூறும்போது, “நெல் அறுவடை செய்யும்போது கொள்முதல் செய் திருந்தால் தரமான வைக்கோ லைப் பெற்று விற்பனை செய்திருக் கலாம். தற்போது அறுவடை முடிந்துள்ளதால் எந்த வயலிலும் வைக்கோல் இல்லை.

இனிமேல் கொள்முதல் செய் தால் எங்காவது மாதக் கணக்கில் பயன்படுத்தாமல் வைக்கப்பட்டிருக் கும் அழுகிய வைக்கோல்தான் கிடைக்கும். முறையாக செயல் படுத்தாததன் விளைவாக ஒரு நல்ல திட்டம் ஓராண்டிலேயே முடங்கிப்போய்விட்டது.

விவசாயிகள் கால்நடைகளைப் பராமரிக்க முடியாமல் கடும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதால் மாற்று நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆலோசிக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறையினர் கூறும்போது, “பதிவு செய்தவர்கள் வைக்கோல் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர். எனினும், அரசின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE