ஆதிச்சநல்லூரில் அரசு அருங்காட்சியகம் கட்டப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படாததால், கட்டிடம் வீணாகிறது.
தாமிரவருணி நதிக்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், தமிழனின் நாகரீகம் சொல்லும் பொக்கிஷம் எனக் கூறப்படுகிறது. இப்பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்டதில் முதுமக்கள் தாழிகள் ஏராளமாக கண்டறியப்பட்டுள்ளன.
இந்த முதுமக்கள் தாழிகள் மற்றும் கிடைக்கப்பெற்ற இதர பொருட்களை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர்கள் சிந்துசமவெளி நாகரிகத்துக்கு முந்தையது ஆதிச்சநல்லூர் நாகரிகம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
ஜெர்மன் ஆய்வாளர்
இங்கு 135 ஆண்டுகளுக்கு முன் ஆய்வு மேற்கொண்ட ஜெர்மன் ஆராய்ச்சியாளர் சாகோர், ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்களை ‘ஆதிச்ச நல்லூர் பொக்கிஷம்’ என்ற பெயரில் பெர்லின் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்தார். அதற்கு பிறகு கடந்த 1902-ம் ஆண்டு இங்கு வந்த அலெக்சாண்டர் இரியா எனும் ஆய்வாளர் இப்பகுதியில் இருந்து, ஏராளமான முதுமக்கள் தாழிகள், வானலி, தயிர்பானை, முக்கனிசட்டி, முக்காலிக்குதில், ஜாடி, உருளி, மையக்கிண்ணம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட சமையல் பாத்திரங்கள், ஈட்டி, எரிவாள், கைக்கோடரி, பலிவாள், அம்புதலை, வேலா யுதம், அகன்றவாய் பரசு, கத்தி, குத்துவாள் போன்ற ஆயுதங்களை மீட்டெடுத்தார். இவை 21 மாட்டுவண்டிகளில் எடுத்துச் செல்லப்பட்டு சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளன.
தொல்லியல் துறை ஆய்வு
இந்திய தொல்லியல் துறையினர் ஆதிச்சநல்லூரில் கடந்த 24.02.2004 முதல் 30.6.2004 வரை ஆறுமாதங்கள் அகழ்வாய்வு செய்தனர்.
114 ஏக்கரில் 4 சென்டில் 10-க்கு 10 அடி அகலத்தில் குழி தோண்டப்பட்டு அகழ்வாய்வு செய்ததில் மூன்று அடுக்குகளாக சிறிதும், பெரிதுமாக 185 தாழிகளும், பல இரும்பு பொருட்களும், விளக்குகளும் கிடைத்தன.
மேலும், தாழிக்குள் மக்கிய நிலையில் நெல்மணிகள், பல ஆயுதங்கள், குருமார்கள் கட்டும் நெற்றிப்பட்டை, சிறு சிறு தங்க ஆபரணங்கள், பாதாளக்கரண்டிகள், உழிகள், வெண்கலப் பொருட்கள் என, முதுமக்கள் பயன்படுத்திய ஏராளமான பொருட்கள் கிடைக் கப்பெற்றன.
ஆமை வேக ஆய்வு
ஹரப்பா, மொகஞ்சதாரோவில் ஆய்வு செய்த வங்க தேசத்து அறிஞர் பானர்ஜி கூறும்போது, `ஆதிச்சநல்லூர் நாகரிகம் என்பது ஹரப்பா, மொகஞ்சதாரோவுக்கு முந்தைய நாகரீகம்’ என தெரிவித்துள்ளார். ஆதிச்சநல்லூர் நாகரிகத்தின் காலத்தை கண்டறிவதற்கான ஆய்வு ஆமை வேகத்தில் நடந்து வருவதாக தொல்லியல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆலய மற்றும் தொல்லியல் பாதுகாப்பு பேரவை அமைப்பாளர்கள் சி.நயினார் குலசேகரன், இரா.பாரதிமுருகன் ஆகியோர் நேற்று மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமாரிடம் மனு அளித்தனர்.
மனு விபரம்:
ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கவும், அந்த பகுதியை பாதுகாக்க கம்பிவேலி அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக அரசு ரூ. 1 கோடி நிதி ஒதுக்கியது. அதன் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியக கட்டிடம் கட்டப்பட்டது. அப்பகுதியைச் சுற்றி கம்பி வேலி அமைக்க 4 அடி ஆழம் தோண்டப்பட்டு கான்கிரீட் போடும் பணி நடைபெற்று வருகிறது.
அருங்காட்சியக கட்டிடம் கட்டப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. தமிழனின் நாகரிகத்தை இன்றைய மாணவர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அதனை உடனடியாக திறக்க வேண்டும்.
ஆதிச்சநல்லூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை இந்த அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும். பெர்லின் அருங்காட்சியகத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் பொக்கிஷங்களை மீட்டு வர இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளனர்.
விரைவில் ஏற்பாடு
மாவட்ட ஆட்சியர் ம.ரவிக் குமார் கூறும்போது, ‘ஆதிச்ச நல்லூரில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில், அங்கு அகழ்வாய்வு செய்ததில் கிடைத்த பொருட்களை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொருட்களை கேட்டு தொல்லியல் துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. விரைவில் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் திறக்கப்படும்’ என்றார் அவர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago