நில மசோதாவை அதிமுக ஆதரிக்கக் கூடாது: ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை ஆதரிக்கும் முடிவை அதிமுக அரசு கைவிட வேண்டும், இந்த மசோதாவுக்கு எதிராக ஒட்டு மொத்த இந்திய மக்களும் ஜனநாயக வழியில் போராட வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தனது ஃபேஸ்புக்கில், "விவசாயிகளின் நலன்களில் அக்கறை அற்ற அதிமுக போன்ற கட்சிகளின் துணையோடு நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை மீண்டும் பிறப்பித்து ஜனநாயக நடைமுறையை சீர்குலைக்கும் முயற்சியில் மீண்டும் பாஜக ஈடுபட்டுள்ளது.

எதற்கெடுத்தாலும் அவசரச் சட்டத்தை பிறப்பித்து, "அவசரச் சட்ட ராஜ்யம்" இந்த நாட்டில் உருவாக, வழி வகுக்கக் கூடாது என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பல முறை எச்சரித்துள்ளது இருந்தும், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் ஏன் அவசர அவசரமாக பாஜக. அரசு திருத்தம் கொண்டு வருகிறது? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

இது தங்களுக்காக உழைத்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான நன்றிக் கடனை பாஜக திருப்பிச் செலுத்த முயற்சிக்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது.

அதை விட, மக்கள் நலன் சாராத இந்த திருத்தத்தை ஏன் அதிமுக அரசு ஆதரிக்கிறது?

இந்தியாவில் நிலம் வைத்திருப்போர் அனைவரையும் இந்த நிலம் கையகப்படுத்தும் மசோதா பாதிக்கும். கிராமத்தில் வைத்திருக்கிறார்களோ அல்லது நகரத்தில் வைத்திருக்கிறார்களோ நிலம் என்பது அவர்களுக்கு ஒரு முக்கிய சமூக பாதுகாப்பு.

ஆகவே இந்த நிலங்களை இழப்பவர்களுக்கு முதலில் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அடுத்து அவர்கள் குடியிருக்கும் இடம் பறிபோகும். இறுதியாக இந்த சமுதாயத்தில் அவர்களுக்கு உள்ள சமூக பாதுகாப்பே இல்லாமல் போய் விடும்.

ஆகவே இந்த நிலம் கையகப்படுத்தும் மசோதாவை ஆதரிக்கும் முடிவை அதிமுக அரசு கைவிட வேண்டும் என்றும், இந்த மசோதாவிற்கு எதிராக ஒட்டு மொத்த இந்திய மக்களும் ஜனநாயக வழியில் போராட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" என அவர் நிலைத்தகவல் பதிந்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE