பரங்கிமலை, மயிலாப்பூரில் அஞ்சலக ஏடிஎம் தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை பரங்கிமலை, மயிலாப்பூர் தலைமை அஞ்சலகங்களில் அஞ்சலக ஏடிஎம் சேவை நேற்று தொடங்கப்பட்டது.

இந்திய அஞ்சல் துறையின் தகவல் தொழில்நுட்ப நவீன மாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக அஞ்சலக ஏடிஎம் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டின் முதல் அஞ்சலக ஏடிஎம் மையம் சென்னை தி.நகரில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் 2013-ல் தொடங்கப் பட்டது.

அஞ்சலக ஏடிஎம் மையங்களை பரவலாக திறக்க அஞ்சல் துறை திட்டமிட்டது. இதன்படி சென்னை அஞ்சல் மண்டலத்துக்கு உட்பட்ட பரங்கிமலை, மயிலாப்பூர் தலைமை அஞ்சலகங்களில் அஞ்சலக ஏடிஎம் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மண்டல அஞ்சல் துறை அதிகாரி மெர்வின் அலெக்சாண்டர் கூறியதாவது:

அஞ்சலகங்களில் சிபிஎஸ் (Core Banking Solutions) திட்டத்தில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ஏடிஎம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் கணக்கு வைத்துள்ளவர்கள் நாட்டின் எந்த இடத்திலும் அஞ்சலக ஏடிஎம் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

சென்னை தி.நகர் தலைமை அஞ்சலகத்தில் இந்த ஏடிஎம் மையம் ஏற்கெனவே இயங்கி வருகிறது. பரங்கிமலை, மயிலாப்பூர் தலைமை அஞ்சல் நிலையங்களில் இப்போது புதிதாக ஏடிஎம்கள் அமைக்கப் பட்டுள்ளன. அடுத்தபடியாக, சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலகம், தாம்பரம் தலைமை அஞ்சலகத்தில் இன்னும் 2 நாட்களில் அஞ்சலக ஏடிஎம்கள் திறக்கப்படவுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE