தமிழகத்தில் மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் நேற்று பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்தது. காற்று மேல் அடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்கு நர் எஸ்.ஆர்.ரமணன் கூறும் போது, “தென் தீபகற்பத்துக்கு அருகில் இருந்த காற்று மேல் அடுக்கு சுழற்சி தற்போது லட்சத்தீவுகள் அருகே உள்ளது. இதனால் தமிழகத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக் கும். உள் மாவட்டங்களில் கன மழை பெய்யலாம். ஆனால், மழையின் அளவு படிப்படியாக குறையும்” என்றார்.

நேற்று பதிவான மழை நிலவரப்படி தங்கச்சிமடத்தில் 10 செ.மீ., திருப்பூர் தாராபுரம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 9 செ.மீ., காரைக்காலில் 7 செ.மீ., புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் 6 செ.மீ., ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மற்றும் தொண்டி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் 5 செ.மீ., புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், மதுரை மாவட்டம் சித்தாம்பட்டி ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது. இது தவிர திருநெல்வேலி, திருச்சி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, சிவகங்கை, விழுப்புரம், கோவை, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருவள்ளூர், சேலம், நீலகிரி, ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE