தமிழக பட்ஜெட்: உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதி

உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதி

இந்த ஆண்டின் பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பதாவது:

நடப்பாண்டில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.4 ஆயிரத்து 921 கோடியே 77 லட்சமும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.3 ஆயிரத்து 564 கோடியே 4 லட்சமும் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதுவே, வரும் 2015-16-ம் நிதியாண்டில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5 ஆயிரத்து 422 கோடியே 7 லட்சமும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.3 ஆயிரத்து 926 கோடியே 32 லட்சமும் ஒதுக்கப்படும்.

மேலும் மத்திய அரசு நிதியிலிருந்து 2015-16-ம் ஆண்டில் ரூ.1,737 கோடியே 69 லட்சம் கிடைக்கும். மொத்தமாக ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசிடமிருந்து ரூ.17 ஆயிரத்து 9 கோடியே 74 லட்சம் நிதியுதவி கிடைக்கும்.

தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.139 கோடி ஒதுக்கீடு

பட்ஜெட்டில் தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.139 கோடியே 26 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 9 இடங்களில் 7 ஆயிரம் கட்டிடத் தொழிலாளர்கள் தங்குமிடங்கள் உள்ளன. கட்டிட வேலை நடைபெறும் இடங்களுக்கே சென்று சிகிச்சை அளிக்க 50 நடமாடும் மருத்துவ மையங்கள், தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக 50 அங்கன்வாடி மையங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் உள்ள இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றி கணக்கெடுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதற்காக ரூ.124 கோடியே 71 லட்சம் தமிழக அரசு செலவு செய்து வருகிறது.

இதன்படி, வரும் நிதியாண்டில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய நிதி உதவிக்கு ரூ.70 கோடி ஒதுக்கப்படுகிறது. அதேபோல் தொழிலாளர் நலத் துறைக்காக இந்த பட்ஜெட்டில் ரூ. 139 கோடியே 26 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலை.க்கு ரூ.110 கோடி நிதியுதவி

அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு ரூ.110 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு ரூ.153 கோடி அளவுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. தற்போது 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு நிதியுதவியாக ரூ.110 கோடியே 57 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், தமிழகத்தில் உள்ள பிற பல்கலைக்கழகங்களுக்கு நிதியுதவியாக ரூ.868 கோடியே 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. பட்ஜெட்டில் உயர் கல்வித்துறைக்கு ரூ.3,696 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.

நீதி நிர்வாகத்துக்கு ரூ.809 கோடி

2015-16-ம் ஆண்டு பட்ஜெட்டில் நீதி நிர்வாகத்துக்கு ரூ.809 கோடியே 70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் புதிய நீதிமன்ற கட்டிடங்கள் போன்ற நீதித்துறைக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.375 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ரூ.134 கோடி செலவில் 169 புதிய நீதிமன்றங்களை அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மின்னணு நீதிமன்றங்கள் திட்டத்தை மாநில அரசு நிதியில் செயல்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீதித்துறைக்காக 2015-16-ம் ஆண்டில் ரூ.809 கோடியே 70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதல் தலைமுறை பட்டதாரி உதவித் திட்டத்துக்கு ரூ. 569 கோடி

முதல் தலைமுறை பட்டதாரி மாணவர் உதவித் தொகை திட்டத்துக்காக 2015-16 ஆம் ஆண்டுக்கு ரூ. 569 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை திருப்பி அளிக்கும் இந்தத் திட்டத்தின் கீழ், கடந்த நிதி ஆண்டில் மாணவ- மாணவிகள் 2,82,948 பேர் பயன் பெற்றனர்.

அரசின் இந்தத் திட்டத்தால், 2010-11 ஆம் ஆண்டில் 6,51,807 ஆக இருந்த உயர் கல்வி மாணவர் சேர்க்கை, 2014-15 ஆம் ஆண்டில் 7,66,393 ஆக உயர்ந்துள்ளது.

தரமான விதைகளுக்கு ரூ.25 கோடி

விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்கச் செய்வதற்கு தமிழக பட்ஜெட்டில் ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு தரமான விதைகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய, ‘தமிழ்நாடு விதைகள் மேம்பாட்டு முகமை’ என்ற புதிய அமைப்பு தொடங்கப்படுகிறது. இதற்காக ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் உரங்களை வாங்கி விவசாயிகளுக்கு வழங்குவதற்காக தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்துக்கு அரசு சார்பில் வட்டியில்லாக் கடன் வழங்கப்படுகிறது.

இதற்காக வரும் நிதியாண்டில் ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE