நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சர்க்கரை ஆலைகளுக்கு உதவ வேண்டும்: தமிழக அரசுக்கு ‘சிஸ்மா’ கோரிக்கை

நிதி நெருக்கடி உட்பட பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் சர்க்கரை ஆலைகளுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என தென்னிந்திய சர்க்கரை ஆலை சங்கம் (சிஸ்மா) கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, ‘சிஸ்மா’ தமிழக பிரிவின் தலைவர் பழநி ஜி.பெரியசாமி நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 5 ஆண்டுகளாக சர்வதேச மற்றும் தேசிய அளவில் சர்க்கரை உற்பத்தி அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதால், சர்க்கரை விலை ஒரு குவிண்டால் ரூ.2,300 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. தற்போது, சர்க்கரை ஆலைகளுக்கு ஒரு கிலோ சர்க்கரை உற்பத்தி செய்ய ரூ.9 வரை நஷ்டம் ஏற்படுகிறது. மேலும், ‘வாட்’ வரி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளதால் சர்க்கரை விற்பனை பெருமளவில் குறைந்து, சர்க்கரை ஆலைகள் தங்களது அரவையை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

சர்க்கரை ஏற்றுமதிக்கு மானியம் கிடைக்க வேண்டும் என்றால் எத்தனால் வழங்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால், எத்தனால் உற்பத்தி செய் வதற்கு தேவையான கரும்புச் சக்கை கிடைக்கவில்லை. இதனால், எத்தனால் உற்பத்தி செய்யும் ஆலைகள் முடங் கிப் போயுள்ளன. மேலும், சர்க்கரை ஏற்றுமதி செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சர்க்கரை ஆலைகள் தற்போது கடும் நிதி நெருக்கடியில் உள்ளன. இதனால், விவசாயிகளுக்கு குறித்த நேரத்தில் பணம் வழங்க முடியவில்லை. தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் உற்பத்தித் துறையை ஊக்குவிக்க பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிக்கு அரசு உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE