இ-டிக்கெட் முன்பதிவுக்கு ஐஆர்சிடிசி புதிய கட்டுப்பாடு

By செய்திப்பிரிவு

மத்திய அரசு நிறுவனமான ஐஆர்சிடிசி கடந்த 1999-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் இணையதளம் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 4.63 லட்சம் டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்படுகின்றன. இந்த முன்பதிவுகளை செய்ய ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஒருவர் கணக்கு தொடங்க வேண்டும். இந்த கணக்கின்படி அவர் மாதம் ஒன்றுக்கு பத்து டிக்கெட் வரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்நிலையில் தற்போது ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒருவர் தனது ஐஆர்சிடிசி கணக்கின் மூலம் காலை 8 மணியிலிருந்து மதியம் 12 மணிக்குள் ஒரே ஒருமுறைதான் டிக்கெட் முன்பதிவு செய்யமுடியும். சேருமிடத்திலிருந்து திரும்பி வருவதற்கான டிக்கெட்டையும் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதற்கு மேல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது. அவரது கணக்கு தானாக லாக் ஆகிவிடும் என்று ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

உரிய முறையில் அங்கீகாரம் பெறாத பல முகவர்கள் ஏராளமான டிக்கெட்களை முன்பதிவு செய்வதாகவும், இதனால் சாதாரண மக்கள் டிக்கெட் கிடைக்காமல் தவிப்பதாகவும், இதனைத் தடுக்கும் வகையில் இந்தக் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்தக் கட்டுப்பாடுகளால் எதிர்பார்த்த தீர்வு கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஒரே நபர் வெவ்வேறு பெயர்களில் கணக்கை தொடங்கி டிக்கெட் முன்பதிவு செய்யக்கூடிய சூழலும் நிலவுகிறது.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஒருவர் ஐஆர்சிடிசியில் கணக்கு தொடங்கும்போது, அவர் தனது முகவரியையும் கொடுக்க வேண்டும். டிக்கெட் முன்பதிவு செய்து ரயிலில் பயணிக்கும்போது அந்தப் பயணி தனது அடையாளம் தொடர்பான ஆவணங்களை காட்ட வேண்டும். எனவே, ஒருவர் பல்வேறு கணக்குகளை தொடங்கி, பெருமளவில் டிக்கெட் முன்பதிவு செய்வது சாத்தியமில்லை. ஒருவேளை அப்படி ஏராளமான கணக்கு தொடங்கினால் அதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுப்போம்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE