பள்ளிக்கூடங்களைக் கட்டவும், பள்ளிகளை சீரமைக்கவும் ரூ. 4400 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், இதை தமிழக அரசு முழுமையாக பயன்படுத்தவில்லை. மத்திய அரசின் நிதிஉதவியுடன் கூடிய திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' தமிழ்நாட்டில் புதிய பள்ளிக்கூடங்களைக் கட்டவும், ஏற்கனவே கட்டப்பட்ட பள்ளிகளை சீரமைக்கவும் வழங்கப்பட்ட ரூ.4400 கோடியை தமிழக அரசு பயன்படுத்தவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாணவிகளுக்கு விடுதி கட்டுதல், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியையும் தமிழக அரசு பயன்படுத்தாமல் வீணடித்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மை
ஒருங்கிணைந்த தேசிய இடைநிலைக் கல்வி இயக்கத்தின்படி தமிழகத்திற்கான ஆண்டு பணித் திட்டம் மற்றும் நிதி ஒதுக்கீட்டை இறுதி செய்வதற்காக டெல்லியில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி நடந்த திட்ட ஒப்புதல் வாரியத்தின் (Project Approval Board) 46 ஆவது கூட்டத்தில்தான் இவ்விவரங்கள் வெளியாகியுள்ளன.
தேசிய இடைநிலை கல்வி இயக்கத்தின்படி தமிழகத்தில் கடந்த 2009-10 ஆம் ஆண்டில் 200 புதிய பள்ளிகளையும், 2010-11 ஆம் ஆண்டில் 344 புதிய பள்ளிகளையும், 2011-12 ஆம் ஆண்டில் 552 புதிய பள்ளிகளையும் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி 2009 முதல் 2012 வரையிலான 3 ஆண்டுகளில் மொத்தம் 1096 பள்ளிகள் புதிதாக கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2009-10 ஆண்டு முதல் இப்போது வரையிலான 6 ஆண்டுகளில் மொத்தம் 125 பள்ளிகள் மட்டுமே புதிதாக கட்டப்பட்டுள்ளன. மேலும் 75 பள்ளிகள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன.
அதாவது ஓராண்டில் கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டிய பள்ளிகள் 6 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவடையவில்லை. மீதமுள்ள 896 பள்ளிகளைக் கட்டுவதற்கான ஆயத்தப்பணிகள் கூட இன்னும் தொடங்கப்படவில்லை. அதேபோல், ஏற்கனவே செயல்பட்டு வரும் 2033 பள்ளிகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் அவற்றில் எந்த பணியும் தொடங்கப்படவில்லை.
மாணவிகள் தங்கிப் படிப்பதற்காக 44 விடுதிகளை கட்ட நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், இதுவரை 18 விடுதிகள் மட்டுமே கட்டப்பட்டிருக்கின்றன. 5265 பள்ளிகளில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை 920 பள்ளிகளில் மட்டுமே இந்த வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன; மீதமுள்ள 4345 பள்ளிகளில் இதற்கான எந்தப் பணியும் இன்று வரை தொடங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, 1616 அறிவியல் ஆய்வகங்கள், 1504 கணினி அறைகள், 1873 நூலகங்கள், 1990 கலை/கைத்தொழில் அறைகள் கட்டுவதற்கும் அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் இதற்கான பணிகளை தமிழக அரசு இன்னும் தொடங்கவில்லை.
இடைநிலை கல்வி இயக்கத்தின்படி தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு பயன்படுத்தப்படாத நிதியின் அளவு மட்டும் ரூ. 4400 கோடி ஆகும். டெல்லியில் நடந்த திட்ட ஒப்புதல் வாரியக் கூட்டத்திற்கு தலைமையேற்ற மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் இடைநிலைக் கல்வித்துறை செயலர் பிருந்தா சரூப், மாணவ, மாணவியரின் கல்வி சார்ந்த பணிகளில் தமிழக அரசு மிகவும் அலட்சியமாக செயல்படுவதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
அதுமட்டுமின்றி, தமிழகத்தில் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து செயல்படுத்தவும் அறிவுறுத்தியிருக்கிறார். மத்திய அரசு செயலாளர் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளிக்க முடியாத தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா, 2010-11 ஆம் ஆண்டில் புதிதாக கட்டப்பட வேண்டிய 344 பள்ளிக்கட்டிடங்களை வரும் ஜூன் மாதத்திற்குள் கட்டி முடிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார். அக்கெடு முடிய இன்னும் 3.5 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் இதுவரை அதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் புதிய பள்ளிகள் எப்போது கட்டி முடிக்கப்படும்? என்பது ஆட்சியாளர்களுக்கு மட்டுமே விடை தெரிந்த வினா.
தமிழக அரசின் அலட்சியம்
புதிதாக அறிவிக்கப்பட்ட பள்ளிக்கூடங்களுக்கு இன்னும் கட்டிடம் கட்டி முடிக்கப்படவில்லை என்ற போதிலும் அப்பள்ளிகள் இயங்கத் தொடங்கிவிட்டன. கட்டிடங்கள் இல்லாத நிலையில் அவை மரத்தடிகளிலும், பாழடைந்த பழைய கட்டிடங்களிலும்தான் செயல்படுகின்றன.
தமிழகத்தை உலகின் உயர்கல்வி மையமாக மாற்றுவோம் என்று கூறியவர்களின் ஆட்சியில் தொடக்கப்பள்ளிகள் மரத்தடிகளில் நடப்பது சோகத்திலும் சோகமான விஷயமாகும். ரூ.4400 கோடி என்பது மிகப்பெரிய தொகையாகும். இதைக் கொண்டு அரசுப் பள்ளிகளை சிறப்பான முறையில் மேம்படுத்தமுடியும். ஆனால், கிடைத்த பணத்தைக் கூட பயன்படுத்திக் கொள்ளாமல் மிக மோசமான சூழலில் கல்வி பயிலும் நிலைக்கு மாணவர்களைத் தமிழக அரசு தள்ளியுள்ளது. தமிழக அரசின் இந்த அலட்சியம் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
ஜெயலலிதா ஆட்சியில் தமிழகம் வளரும் என்பது வெறும் மாயை
மத்திய அரசு ஒதுக்கிய நிதியை தமிழக அரசு முறையாக பயன்படுத்தாததால் கடந்த 2012-13 ஆம் ஆண்டு முதல் தமிழகத்திற்கு புதிய பள்ளிகளை கட்டுதல் உள்ளிட்ட எந்த திட்டத்திற்கும் நிதி உதவி வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இதனால் புதிய பள்ளிகளை கட்ட கடந்த 3 ஆண்டுகளாக ஒரு காசு கூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
ஜெயலலிதா தான் நிர்வாகத்திறமை மிக்கவர்; அவரது ஆட்சியில் தான் தமிழகம் வளரும் என்ற மாயத் தோற்ற பலூன் சில சக்திகளால் ஊதிப் பெரிதாக்கப்பட்டு வந்த நிலையில், அது வெறும் மாயை என்பதை இவ்விவரங்கள் உறுதி செய்கின்றன. எனவே, வெற்று விளம்பரங்களைச் செய்யாமல், கிடப்பில் போடப்பட்டுள்ள மத்திய அரசின் நிதிஉதவியுடன் கூடிய திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago