தமிழக பட்ஜெட் ஓர் ஏமாற்று வித்தை: கருணாநிதி கருத்து

"முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டினேன். அதில் இரண்டு குளம் பாழ் - ஒன்றில் தண்ணீரே இல்லை" என்ற வாய்ஜாலத்திலே உள்ள ஏமாற்று வித்தையைப் போலத் தான் தமிழக பட்ஜெட் உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், '' 2015-2016ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை அதிமுக அரசின் சார்பாக இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ள போதிலும், கடந்த இரண்டு மூன்று மாத காலமாகவே தமிழக அரசின் நிதி நிலைமை வேகமாக மோசமடைந்து வருவதைப் பற்றி நாளேடுகளில் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டுதான் உள்ளன.

நாளிதழ்கள் வெளியிடுவது ஒரு புறம் இருக்க; தமிழக முதலமைச்சர் இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதம் ஒன்றில், "தமிழ்நாடு ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் சிக்கி யுள்ளது" என்று தெரிவித்திருப்பது, ஏடுகளில் வருவது உண்மைதான் என்பதற்கு ஒப்புதல் அளிப்பதாகவே அமைந்திருக்கிறது.

இதையும் உறுதிப்படுத்துவதைப் போல இன்றைய நிதி நிலை அறிக்கையின் தொடக்கத்திலேயே "கடந்த ஆண்டிலிருந்து உலக அளவிலும், தேசிய அளவிலும் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, நமக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக வரி வருவாய் எதிர்பார்த்த அளவிற்கு உயரவில்லை" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

மாநிலங்கள் மூலமாக நிறைவேற்றப்படும் மத்திய அரசின் எட்டு திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன என்றும்; மாநிலத் திட்டங்களுக்கான சிறப்பு மத்திய உதவி வருங்காலத்தில் கிடைக்காது என்றும்; மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு 21,116 கோடி ரூபாய் அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது என்றும்; நடைமுறை நிர்வாகத் தேவைகளுக்குக் கூட என்றென்றும் மத்திய அரசினைச் சார்ந்தே இருக்க வேண்டிய கட்டாய நிலை என்றும் நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சர் தமிழகத்திற்கு வருகை தந்த போது தமிழக முதலமைச்சர் அவரைச் சந்தித்து இந்தக் குறைகளைத் தெரிவித்திருக்கலாம் அல்லவா? அல்லது மத்திய நிதியமைச்சர் அதிமுகவின் தலைவியை அவரது இல்லத்திலே சந்தித்த போது உடன் இருந்து இந்தக் கோரிக்கைகளையெல்லாம் எடுத்துச் சொல்லாமல் இருந்தது ஏன்?

தமிழக அரசின் 2015-16ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு விடை கிடைக்குமென்று நாட்டு மக்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தார்கள். குறிப்பாக ரேஷன் பொருள்கள் விநியோகத்தில் பருப்பு வகைகள் முறையாக வழங்கப்படவில்லை என்ற குறை இருக்கிறது. ஆனால் நிதிநிலை அறிக்கையிலே பருப்பு வகைகளின் சந்தை விலை உயர்ந்துள்ளது என்று கூறப்பட்டிருக்கிறதே தவிர, ரேஷன் கடைகளில் முறையாக அவை வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு எந்த விளக்கமும் இல்லை.

வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட்டது பற்றி நிதி நிலை அறிக்கையில் பெருமையாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் பொதுவாக விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றியோ, டெல்டா மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகளைப் பற்றியோ எதுவும் இல்லை. நெல், கரும்பு விவசாயிகளின் கொள்முதல் விலை உயர்வு பற்றியோ, கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகை பற்றியோ, நிதி நிலை அறிக்கையில் விளக்கம் இல்லை.

கர்நாடக அரசு அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு, காவிரியில் அணை கட்ட முயன்று கொண்டிருக்கின்ற போது, தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது பற்றி எந்த தகவலும் இல்லை.

உச்ச நீதி மன்றத் தீர்ப்பையொட்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவது பற்றியோ; அவர்கள் தொடர்ந்து போராடி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது பற்றியோ; மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் உடன்குடி மின் திட்டத்தைத் தொடங்கி நடத்துவது பற்றியோ; நெடுஞ்சாலைப் பராமரிப்பை தனியார் மயப்படுத்துவதால் நெடுஞ்சாலைப் பணியாளர்களுக்கு ஏற்படும் வேலை இழப்பு பற்றியோ; சுங்கச் சாவடிக்குப் பாக்கி வைத்த அரசு போக்குவரத்துத் துறைக்கு உயர் நீதி மன்றமே கண்டனம் தெரிவித்ததே, அதற்கு என்ன நிவாரணம் என்பது பற்றியோ; கல்வித் துறையில் ஊழல் தற்போது நிலவுவதைப் போல எந்தக் காலத்திலும் இருந்ததில்லை, அதுவும் மாணவர்களின் தேர்வுக் காலம் என்றால் கேட்கவே வேண்டியதில்லை.

நேற்றையதினம் உயர் நீதி மன்றமே, கல்வித் துறை செயலாளருக்கே கண்டனம் தெரிவித்திருக்கிறதே, பள்ளிக் கல்வித் துறை சீர்திருத்தம் பற்றியோ; மின் துறை பற்றி கூறவே தேவையில்லை. ஆட்சிக்கு வந்ததிலிருந்து நான்காண்டு காலமாக மின் பற்றாக் குறை தீரும், தீருமென்று அரசு தரப்பினர் வாய்ப் பந்தலிலேயே காலத்தைக் கழித்து வருகிறீர்களே, மின் பற்றாக்குறை எப்போது தீரும் என்பது பற்றியோ; 3000 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்யப்படும் என்று அறிவித்து விட்டு, மூன்றாண்டுகளுக்குப் பிறகு 115 மெகாவாட் சூரிய மின் சக்தித் திறன் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று நிதி நிலை அறிக்கையில் பெருமைப் பட்டுக் கொண்டிருக்கிறீர்களே, மீதம் எப்போது என்பது பற்றியோ இடம்பெறவில்லை.

அதேபோல், சென்னையிலும் மற்றும் மாவட்டங்களிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு வருமென்று செய்தி வருகிறதே, அது பற்றியோ; புதிய தொழில்கள் தொடங்க போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் தொடர்ச்சியாக எத்தனை தொழில்கள் தமிழகத்திலே தொடங்கப்பட்டுள்ளன என்பது பற்றியோ; கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மின் வெட்டு காரணமாக மூடப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளை மீண்டும் திறப்பதற்கான வசதிகள் செய்து கொடுப்பது பற்றியோ; இந்த நிதி நிலை அறிக்கையில் எதுவுமே இல்லை.

ஆனால் திரும்பத் திரும்ப ஒரு வார்த்தை மட்டும் இடம் பெற்றுள்ளது. என்ன தெரியுமா? தமிழகத்தின் விடிவெள்ளி - ஏழைகளின் ஏந்தல் - தமிழகத்தின் தன்னிகரில்லாத் தலைவி - எழுச்சி மிகு தலைவி என்ற இந்த வார்த்தைகள் தான் இந்த நிதி நிலை அறிக்கையிலே திரும்பத் திரும்ப இடம் பெற்றுள்ளதே தவிர, நாட்டு மக்களுக்குப்பயன்படும் எந்தவிதமான அறிவிப்பும் இதிலே இடம் பெறவில்லை.

மொத்தத்தில் இந்த நிதி நிலை அறிக்கை "முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டினேன். அதில் இரண்டு குளம் பாழ் - ஒன்றில் தண்ணீரே இல்லை" என்ற வாய்ஜாலத்திலே உள்ள ஏமாற்று வித்தையைப் போலத் தான் உள்ளது'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE