உடன்குடி மின் திட்டம்: நத்தம் விஸ்வநாதனுக்கு பதிலடி கொடுக்கும் கருணாநிதி

உடன்குடி மின் திட்டத்துகான டெண்டரில் குறை என்று சொல்ல மூன்றாண்டுகள் ஆனதா? தாமதப்படுத்தப்பட்ட காலத்தில் நடந்தது என்ன? என்று மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' உடன்குடி மின் திட்டத்தைத் தாமதம் செய்ததற்கும், ரத்து செய்ததற்கும் விசாரணைக் கமிஷன் அமைக்கத் தயாரா என்று அதிமுக அரசிடம் 18-3-2015 தேதிய என் அறிக்கையில் கேட்டிருந்தேன். அந்த துறையின் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உடன்குடி மின்சாரத் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றும்,

பொய்யான தகவல்களை நான் என்னுடைய அறிக்கையிலே வெளியிட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார். நான் வெளியிட்டுள்ள தகவல்கள் பொய் என்றால் விசாரணைக் கமிஷன் அமைத்தால், நான் கூறுவது சரியான தகவலா, அல்லது அமைச்சர் கூறியிருப்பது உண்மையா? உடன்குடி மின்சாரத் திட்டம் தாமதம் ஆனதற்கும், தற்போது அந்த டெண்டரை ரத்து செய்ததற்கும் என்ன காரணம் என்ற உண்மைகளெல்லாம் உலகத்திற்குத் தெரிந்து விடும் அல்லவா?

நீங்கள் நியாயவான்கள் என்றால், உடனே நடுநிலையான நீதிபதி ஒருவரைக் கொண்டு விசாரணைக் கமிஷன் அமைத்திருக்க வேண்டியது தானே? உடன்குடி மின்சாரத் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்பது தான் அமைச்சர் அறிக்கையின் முடிவான கூற்று. கழக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டத்தைத் தொடரக் கூடாதென்ற காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, அதை ரத்து செய்து விட்டு, புதிதாக உடன்குடியில் இந்த மின் திட்டத்தைத் தொடங்கப் போவதாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 24-2-2012 அன்று புதியதாக அறிவித்து - அதற்காக டெண்டர் விடும் பணிகள் 2013ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்டு - 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொழில் நுட்பப் புள்ளி ஒப்பந்தம் திறக்கப்பட்டு - அதற்குப் பின் ஆறு மாத காலத்திற்குள் திறக்கப்பட வேண்டிய விலைப்புள்ளி அவ்வாறு ஆறு மாதத்திற்குள் திறக்கப்படாமல், 12 மாதங்களுக்குப் பிறகு 2014ஆம் ஆண்டு நவம்பரில் திறக்கப்பட்டு - அதற்குப் பிறகும் நான்கு மாதங்கள் கழித்து, அந்த டெண்டரையே ரத்து செய்த நத்தம் விஸ்வநாதன் இன்றைய அறிக்கையில் "உடன்குடி நிலை 1 திட்டத்திற்கான புதிய ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும்" என்று அறிவித்திருக்கிறார் என்றால்; அ.தி.மு.க. அரசின் செயல்பாட்டை எண்ணிச் சிரிப்பு வருகிறதா இல்லையா? "கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன், வானத்தைக் கீறி வைகுண்டத்திற்கு வழி காட்டுகிறேன்" என்று கூறியவருக்கும், நத்தம் விஸ்வநாதனுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?

"உடன்குடி திட்டத்திற்கு நிலக்கரி கையாளும் சுய சார்புத் துறைமுகம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் துவங்கும்"என்றும் அமைச்சர் பதில் அளித்திருக்கிறார். உடன்குடி திட்டத்தை முடிவு செய்யாமல், அந்தத் திட்டத்திற்குத் தேவையான நிலக்கரியைக் கொண்டு வர, முன் சுய சார்பு துறைமுகத்தைத் துவங்கப் போகிறோம் என்ற அமைச்சரின் அறிக்கை, குதிரைக்கு முன்பக்கம் வண்டியைப் பூட்டுவதைப் போல அல்லவா இருக்கிறது?

நான் என்னுடைய 18ஆம் தேதிய அறிக்கையில், "2013ஆம் ஆண்டில் டெண்டர் கோரப்பட்டது. அது எப்போது திறக்கப் பட்டது? திறக்கப்பட்ட பிறகு எத்தனை மாதங்களாகின்றன? ஏன் இந்தத் தாமதம்? தாமதத்திற்கு யார் பொறுப்பு? இந்தத் தாமதத்திற்கு மின் துறை அமைச்சரும், சில குறிப்பிட்ட அதிகாரிகளும் தான் காரணம் என்பது உண்மையா? தனியார் நிறுவனங்களிடமிருந்து கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதில் காட்டப்படும் உற்சாகம் தான் தாமதத்திற்கும், இறுதியில் ரத்து செய்ததற்கும் காரணம் என்று சொல்லப்படுவது உண்மையா? இதனால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு கோடி ரூபாய்? இந்த இழப்புக்கு யார் காரணம்? மின்சார வாரியமா? தலைமைச் செயலக உயர் அதிகாரிகளா? திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தை முறைப்படி அதிமுக ஆட்சியில் நிறைவேற்றியிருந்தால் தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது அல்லவா?

அவ்வாறு மின் பற்றாக்குறை ஏற்பட்டதால் தானே, வெளிச் சந்தையில் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை தமிழக அரசு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது? மக்கள் மத்தியில் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விளக்கமளித்திட தமிழக அரசு முன் வருமா? இந்த ஒரு டெண்டரில் மட்டும் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விருப்பு வெறுப்பற்ற விசாரணை நடத்தப்பட்டால் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்; இந்த அரசினர் அதைச் செய்வார்களா?" என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டிருந்தேனே, இந்தக் கேள்விகளுக்கு நத்தம் விஸ்வநாதனின் நேரடியான பதில்கள் எங்கே?

இதற்கெல்லாம் பதிலளிக்காமல், நான் எனது அறிக்கையில் திமுக ஆட்சியில் 22-2-2009 அன்று "உடன்குடி பவர் கார்பரேஷன் லிமிடெட் '' நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது என்று கூறியிருந்தேன். இந்தத் தகவல் உண்மை என்பதை ஒப்புக் கொண்டுள்ள அமைச்சர், கழக ஆட்சியில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெறவில்லை என்றும், நிலம் கையகப்படுத்தும் பணி முடியவில்லை என்றும் தெரிவித்து, அந்தத் தகவல் பொய்யானது என்று தெரிவித்திருக்கிறார்.

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டத்தை வேண்டாமென்று கூறிவிட்டுத் தான், அதிமுக ஆட்சியில் புதிதாக உடன்குடியில் மின் உற்பத்தித் திட்டத்தைத் தொடங்கப் போவதாக அன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து விட்டாரே, பிறகு ஏன் கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் பற்றிப் பேச வேண்டும்? எனது அறிக்கையிலே நான் கூறியிருப்பது பொய் என்றால், ஜெயலலிதா 2012 ஆம் ஆண்டு அறிவித்த உடன்குடி மின் உற்பத்தித் திட்டம் மூன்றாண்டுகளுக்குப் பிறகு, ஒன்றுமே இல்லை என்றாகி விட்டதா? இல்லையா?

இந்தத் தாமதத்திற்கு அதிமுக ஆட்சியும், குறிப்பாக இந்தத் துறையின் பொறுப்பை ஏற்றுள்ள நத்தம் விஸ்வநாதனும் தான் காரணம் என்பது தவறான தகவலா? திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டத்திற்கு நிலம் எடுக்கப்பட்டதாக நான் கூறிய தகவலும் தவறானதல்ல; 2010-2011ஆம் ஆண்டுக்கான இந்தத் துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் பக்கம் 29இல் "தமிழக அரசு இத்திட்டத்திற்காக புறம்போக்கு நிலத்தை ஒதுக்குவதற்கான ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் முதல் கட்ட வேலைகள் மற்றும் சட்டப்படி தேவைப்படுகின்ற தடை நீக்கங்கள் பெறுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன" என்று கூறப்பட்டிருப்பதை இப்போதாவது அமைச்சர் எடுத்துப் படித்துப் பார்த்து உண்மையைப் புரிந்து கொள்ளலாம்.

கழக ஆட்சியில் மின் வாரியத்திற்கு நிலமே ஒதுக்கப்படவில்லை என்று இரண்டாவது பத்தியில் சொல்லிவிட்டு, பின்னர், "மின்வாரியத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்க வழி வகை செய்தது ஏன் என்பதைக் கருணாநிதி விளக்கத் தயாரா?"என்று கேட்டிருக்கிறார். எந்தத் தனியாருக்கு நான் தாரை வார்த்தேன் என்பது பற்றி அமைச்சரின் அறிக்கையில் எதுவுமில்லை. அவருடைய அறிக்கையைப் படிக்கும் தமிழ்நாட்டு மக்கள் அதில் இருந்தே உண்மையைப் புரிந்து கொள்ளலாம்.

புள்ளிவிவரங்களோடு, தேதிவாரியாக நிகழ்வுகளை எல்லாம் தெரிவித்து; அதிமுக ஆட்சியில் கோரப்பட்ட டெண்டரை மூன்றாண்டுகள் கழித்துத் தாமதம் செய்து, இப்போது ரத்து செய்ததற்கு என்ன காரணம், விசாரணைக்குத் தயாரா என்றால், இதற்கு எந்தப் பதிலும் கூறாமல், திமுக ஆட்சியைப் பற்றி அமைச்சர் தனது அறிக்கையில் வியாக்யானம் செய்து கொண்டிருப்பதில் இருந்தே அவரிடம் பதில் அளிக்க எந்த அடிப்படையும் இல்லை, பதில் அளிக்காவிட்டால் பதவி பறி போய்விடும், தான் என்ன செய்ய முடியும் என்று தவிப்போடு கேட்பது தான் நாட்டிற்குத் தெரிகிறது.

29-11-2014 அன்று இதே நத்தம் விஸ்வநாதன் அளித்த அறிக்கையிலே, "உடன்குடி அனல் மின் திட்டம் நிறுவ, பொறியியல் கொள்முதல் கட்டுமானப் பணிக்கான ஆணை விரைவில் வழங்கப்படும்; 2018-2019ஆம் ஆண்டில் மின்உற்பத்தியைத் துவக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று சொன்னாரா இல்லையா?

டெண்டர் முடிவு செய்திருந்தால் தானே, பொறியியல் கொள்முதல் கட்டுமானப் பணிக்கான ஆணை விரைவில் வழங்கப்பட்டிருக்க முடியும்; டெண்டர் முடிவு செய்யப்படாமலேயே அமைச்சர் பொய்யான தகவலைத்தந்திருக்கிறார் என்று தானே பொருள்?

''டெண்டர் ரத்து செய்யப்பட என்ன காரணம்? "10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத இந்த டெண்டரை ரத்து செய்யவும்"என்று வலியுறுத்தல் வந்தது தான் காரணமா?"என்று எனது அறிக்கையில் தெரிவித்திருந்தேனே, அதற்கு நத்தம் விஸ்வநாதனின் நீண்ட பதிலில் எதுவும் கூறவில்லையே; அந்தச் செய்தி உண்மை என்பதால் அதை வசதியாக மறந்து விட்டாரா?

"டெண்டரில் குறை இருந்ததால் ரத்து செய்தோம்"என்கிறார் மின் துறை அமைச்சர். 2013ஆம் ஆண்டு டெண்டர் கோரி விட்டு, மூன்றாண்டுகள் வைத்திருந்து, ஆணை பிறப்பிக்கப்படப் போவதாகவும் கூறிவிட்டு, அதற்குப் பிறகு டெண்டரில் குறை இருந்தது, ஆகவே ரத்து செய்கிறோம் என்று அமைச்சர் கூறுகிறார் என்றால், காதிலே பூ சுற்றுகின்ற வேலையைச் செய்ய கடுமையாக முயலுகிறார் அமைச்சர் என்று தானே பொருள் '' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்