இறைச்சிக்காக சுகாதாரமற்ற முறையில் வெட்டப்படும் கால்நடைகள்: மாநகராட்சி, மாசு கட்டுப்பாடு வாரியம் அறிக்கை அளிக்க உத்தரவு

சென்னையில் இறைச்சிக்காக சுகாதரமற்ற முறையில் கால்நடைகளை வெட்டும் விவகாரம் தொடர்பான வழக்கில் மாநகராட்சி மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 1-ம் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் இறைச்சிக்காக சுகாதாரமற்ற முறையில் கால்நடைகளை வெட்டுவதை தடுக்க வேண்டும். இதற்காக விலங்குகள் வதைக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று பிஎஃப்சிஐ என்ற கால்நடைகள் நல அமைப்பு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 1-ம் அமர்வில் வழக்கு தொடர்ந்திருந்தது.

அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி எம்.சொக்கலிங்கம், தொழில் நுட்பத்துறை உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

“சென்னை மாநகராட்சி சார்பில் 3 இடங்களில் இறைச்சிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கூடங்கள் செயல்பட மாசு கட்டுப் பாடு வாரியத்திடம் அனுமதி பெற வேண்டியது கட்டாயம். ஆனால் இதுவரை மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் அனுமதி பெறவில்லை. மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, இறைச்சிக் கூடங்களுக்கு அனுமதி வழங்க ஒவ்வொரு மாநிலத்திலும் ஒழுங்கு நடவடிக்கை குழு ஒன்றை மாசு கட்டுப்பாடு வாரியம் அமைக்க வேண்டும். இக்குழுவும் தமிழகத்தில் அமைக்கப்படவில்லை” என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

விதிகளை மீறி செயல்பட்டு வரும் இறைச்சி கூடங்கள் மற்றும் கடைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்ட அறிக்கையில் திருப்தி

இல்லை என்று இந்த விசாரணை யின்போது அமர்வின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். அடுத்த விசாரணை யின்போது இறைச்சிக் கூடங்கள் செயல்பட்டு வருவது தொடர்பாகவும், ஒழுங்கு நடவடிக்கை குழு தொடர் பாகவும் மாநகராட்சி மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்

. மனு மீதான அடுத்த விசாரணை ஏப்ரல் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE