தமிழகம் முழுவதும் நீதிபதிகளின் பாதுகாப்பு பணிக்கு 1,900 போலீஸார் நியமனம்: உயர் நீதிமன்றத்தில் டிஜிபி தகவல்

By செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் உயர் நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகள் பாதுகாப்புப் பணியில் 1,900 போலீஸார் ஈடுபடுத்தப்படுவதாக உயர் நீதிமன்றத்தில் டி.ஜி.பி. தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி பிரகாசன். இவரது வீட்டின் மீது கடந்த 18.2.2015-ம் தேதி கல் வீசப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் முக்கிய வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை முதல் அமர்வு உத்தரவிட்டது. மேலும், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக காவல்துறை இயக்குநருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக காவல்துறை இயக்குநர் சார்பில் ஐஜி எச்.எம்.ஜெயராம் பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில், நீதிபதி பிரகாசன் வீட்டு சுற்றுச்சுவரில் இருந்த தவளை மீது 12 வயது சிறுவன் கல் எறிந்துள்ளார். அந்த கல் நீதிபதியின் வீட்டின் ஜன்னல் மீது பட்டு உடைந்துள்ளது. கண்ணாடி துண்டுகள் பட்டதில் நீதிபதிக்கு லேசான காயம் ஏற்பட்டது.

சிறுவனும், அவனது பெற்றோரும் நீதிபதியை சந்தித்து வருத்தம் தெரிவித்தனர். இதையடுத்து கேணிக்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரை நீதிபதி திரும்ப பெற்றுக்கொண்டார்.

தமிழகம் முழுவதும் நீதிபதிகள் பாதுகாப்பு, அவர்களது வீடு மற்றும் நீதிமன்ற பாதுகாப்பு பணியில் 1,900 போலீஸார் ஈடுபடுத்தப்படுகின்றனர். சென்னை உயர் நீதிமன்றத்துக்கான பாதுகாப்புப் பணியில் 213 போலீஸார் ஈடுபடுகின்றனர். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வீடுகளின் பாதுகாப்பு பணியில் 207 போலீஸாரும், நீதிபதிகளின் தனி பாதுகாப்புக்கு 64 பேரும் உள்ளனர்.

உயர் நீதிமன்ற மதுரை கிளை பாதுகாப்புப் பணியில் 79 போலீஸார் உள்ளனர். கிளை நீதிபதிகள் வீடுகள் பாதுகாப்பு பணியில் 87 பேரும், தனி பாதுகாவலர்களாக 23 பேரும் உள்ளனர். ரோந்து பணியில் 15 போலீஸார் ஈடுபடுகின்றனர்.

பல்வேறு ஆணையங்களின் தலைவர்களாக பணிபுரியும் நீதிபதிகளின் பாதுகாப்பு பணியில் 23 தனி பாதுகாவலர்கள் உட்பட 98 போலீஸார் ஈடுபடுகின்றனர். கீழமை நீதிமன்ற நீதிபதிகள், முக்கிய வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளின் பாதுகாப்பு பணியிலும், நீதிபதிகளின் வீடுகள் மற்றும் நீதிமன்ற பாதுகாப்பு பணியில் 1083 போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர் எனக் கூறப்பட்டிருந்தது. இதனை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE