தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் இன்று தர்ணா: பெண் டாக்டரை தாக்கிய செவிலியரை பணி நீக்க கோரிக்கை

அரசு பெண் டாக்டரை தாக்கிய, செவிலியரை பணி நீக்கம் செய்யக்கோரி தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று அளித்த பேட்டி:

திருவாரூர் மாவட்டம் ஆலங் குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 17-ம் தேதி பணியில் இருந்த டாக்டர் ஆடலரசி மற்றும் உதவியாளரை, கிராம சுகாதார செவிலியர் இந்திரா என்பவர் தாக்கினார். ஆனால் தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்காமல் உதவியாளர் மீது போலீஸில் புகார் கொடுத்து, அவரை கைது செய்ய வைத்துள்ளனர். மேலும் டாக்டர் ஆடலரசியை பணியிடமாற்றம் செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. கிராமப் புற செவிலியர் இந்திராவை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியிட மாற்றம் செய்யப்பட்ட டாக்டர் ஆடலரசியை மீண்டும், அதே இடத்தில் பணியில் அமர்த்த வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்ச் 26-ம் தேதி (இன்று) தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனை கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தர்ணா போராட்டம் நடக்க உள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் காலை 8 மணி முதல் 9 மணி வரை தர்ணா போராட்டம் நடைபெறும். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறும் நோயாளிகள் பாதிக்காதபடி தர்ணா போராட் டத்தில் டாக்டர்கள் ஈடுபடுவார்கள். இந்த பிரச்சினையில் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், சங்கத்தின் பொதுக்குழுவை கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE