திருச்சியில் பரிதாபம்: மாற்றுத் திறனாளி மகனை எரித்துக் கொன்று தாய் தற்கொலை

திருச்சியில் மாற்றுத் திறனாளி மகனை எரித்துக் கொன்று, தாயும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி மேலசிந்தாமணி பகுதியில் உள்ள சுப்பிரமணிய சாமி தெருவைச் சேர்ந்தவர் கணேசன்(55). சமையல் தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி(45). இவர்களது ஒரே மகன் மணிகண்டன்(15). மாற்றுத் திறனாளியான மணிகண்டன், எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், 8-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திய மணிகண்டனுக்கு பல இடங்களில் சிகிச்சை அளித்தும், நோய் குணமாகவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சமையல் பணிக்காக கணேசன் ஸ்ரீரங்கம் சென்றுவிட்டார். வீட்டில் விஜயலட்சுமியும், மணிகண்டனும் மட்டும் இருந்துள்ளனர். நேற்று அதிகாலை அவர்களது வீட்டிலிருந்து புகை வருவதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு வந்த போலீஸார் வீட்டின் கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது, இருவரும் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தனர்.

தகவலறிந்து வந்த கணேசனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் மணிகண்டனுக்கு குணமாகாததால், தாங்கள் மனமுடைந்த நிலையில் இருந்ததாகவும், இதனால் மகனைக் கொன்று, விஜயலட்சுமியும் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் கணேசன் தெரிவித்துள்ளார்.

இருவரது சடலங்களையும் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி மகனைக் கொன்று, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE