உடல் பருமனால் உலகளவில் 1 கோடியே 10 லட்சம் பேர் இறக்கின்றனர்: நுகர்வோர் பாதுகாப்பு கருத்தரங்கில் தகவல்

உலகளவில் 1 கோடியே 10 லட்சம் பேர் உடல் பருமன் காரணமாக உயிரிழக்கின்றனர் என்று சர்வதேச நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் ஆசிய பசிபிக் பிராந்திய தலைவர் இந்திராணி துரைசிங்கம் கூறியுள்ளார்.

நுகர்வோர் பாதுகாப்பு தினத்தையொட்டி சர்வதேச நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு, கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.ஐ.இ.டி. மகளிர் கல்லூரி ஆகியவை சார்பாக ‘உணவு பாதுகாப்பு மற்றும் தவறான விளம்பரங்களால் வழிநடத்தப்படும் நுகர்வோர்’ என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் மாநில உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயல் நசிமுதீன் பேசும்போது, “நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும். நுகர்வோர் பொருட்களை வாங்கும்போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. தற்போது நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 நடைமுறையில் உள்ளது. இந்த சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்.

முன்னதாக சர்வதேச நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் ஆசிய பசிபிக் பிராந்திய தலைவர் இந்திராணி துரைசிங்கம் கூறும்போது, “தற்போது அனைத்து உணவுப் பொருட்களும் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு வருகி றது. இதுபோல் அடைக்கப்பட்டு வரும் உணவு பொருட்களில் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் பயன்படுத்தலாமா என்பது குறித்த குறிப்பு இருக்க வேண்டும். உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் பேர் புகைபிடிப்பதால் உயிரிழக் கின்றனர். ஆனால், அதைவிட அதிகமாக 1 கோடியே 10 லட்சம் பேர் உடல் பருமன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் உயிரிழந்து வருகின்றனர். இதற்கு உணவுப் பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் வேலை சூழ்நிலை ஆகியவையே முக்கிய காரணங்களாகும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE