தேனி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர 400-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளைக் கட்டி விவசாயி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
தேனி மாவட்டம், மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கோம்பை கிராமம். இந்த கிராமம் மலை அடிவாரத்தில் இருப்பதால், மழை மறைவு (மழை பெய்யாத) பிரதேசம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கிராமத்தில் பல இடங்கள் வானம் பார்த்த பூமியாக கிடந்தது. சில இடங்களில் சோளம், கம்பு, கேழ்வரகு என மானாவாரி சாகுபடி மட்டும் நடந்து வந்தது.
இந்நிலையில், கோம்பை பேரூராட்சித் தலைவராக கடந்த 1996-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பி.ராமராஜ் என்ற விவசாயி, அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி மானாவாரி சாகுபடி தவிர, மற்ற காய்கறிகளை சாகுபடி செய்ய, தமிழக அரசுடன் இணைந்து தற்போது வரை சிறியதும், பெரியதுமான நானூறுக்கும் மேற்பட்ட தடுப்பணைகளைக் கட்டி சாதனை படைத்துள்ளார்.
தள்ளாத வயதிலும் சுறுசுறுப்பு
74 வயதானாலும் இளைஞரைப் போல சுறுசுறுப்புடன் வேலை செய்து வரும் பி. ராமராஜ் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
கோம்பை மேடான பகுதி என்பதால், முல்லை பெரியாறு அணையில் இருந்து 18-ம் கால்வாய் வழியாக தண்ணீரைக் கொண்டு வரமுடியில்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டது. பல விவசாயிகள் பிழைப்பு தேடி, வேறு மாவட்டங்களுக்குச் செல்லத் தொடங்கியது எனக்கு வேதனை அளித்தது.
இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய நினைத்த நேரத்தில், அரசு 1997-ம் ஆண்டு நதி நீர் பள்ளத்தாக்கு திட்டத்தை, தேனி மாவட்டத்தில் கொண்டு வந்தது. இந்த திட்டத்தில் கோம்பை பேரூராட்சியையும் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டேன். இதனையடுத்து, செயற்கைக் கோள் மூலம் கோம்பை பகுதி வரைபடம் தயாரிக்கப்பட்டது. இதில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் ஓடைகளை கண்டறிந்து, அதன் குறுக்கே எனது பதவிக் காலத்திலேயே 240 தடுப்பணைகள் கட்டப்பட்டன. மானாவாரி காடுகளில் நீரை தேக்க 1500 ஏக்கருக்கு மண் கரைகள் அமைக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டது.
பின்னர், தேர்தலில் போட்டியிடாமல் மேற்குமலை தொடர்ச்சி மேம்பாட்டுத் திட்டம் என்ற சங்கத்தை தொடங்கி, அதன் தலைவராக இருந்துகொண்டு தோட்டக்கலை பொறியியல்துறை மூலம் ஆண்டுதோறும் 5 தடுப்பணைகள் வீதம் 10 ஆண்டுகளில் 50 தடுப்பணைகளும், வனத்துறை மூலமாக 48 தடுப்பணைகளும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் விவசாயிகள் பங்களிப்புடன் இரண்டு பெரிய தடுப்பணைகளும் என, இதுவரை 400-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.
மேலும் 36 தடுப்பணைகள்
தற்போது தோட்டக்கலை பொறியியல் துறை மூலம் 36 தடுப்பணைகள் கட்ட திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மழைநீர் சேமிப்பு, மண்வள பாதுகாப்பு விவசாயிகள் சங்கம் என்ற மற்றொரு புதிய சங்கத்தைத் தொடங்கி சேதமடைந்த தடுப்பணைகளை அரசு உதவியை எதிர்பார்க்காமல், இதுநாள் வரை விவசாயிகள் பங்களிப்புடன் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இப்பகுதியில் மானாவாரி விவசாயமே நடந்துவந்த நிலையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால், கடந்த சில ஆண்டுகளாக தென்னை, வாழை, கொத்தமல்லி என மற்ற பயிர்களும் விளைவிக்கப்பட்டு வருகின்றன.
வெளியூர் சென்ற விவசாயிகளும் சொந்த ஊருக்குத் திரும்பிவந்து விவசாயத்தில் ஈடுபட தொடங்கி விட்டனர் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago