அலகாபாத் துப்பாக்கிச்சூடு கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: தமிழகத்தில் பணிகள் பாதிப்பு

By செய்திப்பிரிவு

அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் காவல் துறை உதவி ஆய்வாளரால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.

உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கடந்த 11-ம் தேதி துப்பாக்கியால் சுட்டதில் வழக்கறிஞர் ஒருவர் இறந்தார். இதைக் கண்டித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் மார்ச் 16-ம் தேதி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்துவதாக இந்திய பார் கவுன்சில் அறிவித்தது. அதன்படி தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற வளாகத்தில் ஊர்வலம் சென்றனர். அப்போது உத்தரப் பிரதேச காவல் துறையினருக்கு எதிராக கோஷமிட்டனர். பின்னர் ஆவின் கேட் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சமீபத்தில் பார் கவுன்சில் அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் அதன் தலைவர் எஸ்.பிரபாகரன் தலைமையில் ஊர்வலமாகச் சென்று என்எஸ்சி போஸ் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சைதாப்பேட்டை, எழும்பூர், ஜார்ஜ் டவுன், பூந்தமல்லி உட்பட தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தியதால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE