ஓய்வுபெற்ற வங்கி ஊழியரை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டல்: பெண் உட்பட 3 பேர் கைது

ஓய்வுபெற்ற வங்கி ஊழியரை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டிய பெண் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை கீழ்க்கட்டளை துரைசாமி நகரில் வசிப்பவர் ராமமூர்த்தி (60). ஓய்வுபெற்ற வங்கி ஊழியரான இவர், விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார். மறுமணம் செய்ய விரும்பி நாளிதழில் விளம்பரம் கொடுத்திருந்தார். இதைப் பார்த்த அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த ரேக சாவித்திரி என்ற வைஷ்ணவி (50) என்பவர், ராமமூர்த்தியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின்னர், இருவரும் பூந்தமல்லியில் உள்ள ஒரு கோயிலில் சந்தித்துப் பேசினர்.

இந்நிலையில், கடந்த 14-ம் தேதி கோயம்பேடு அருகே தனியார் ஓட்டல் முன்பு வைஷ்ணவிக்காக ராமமூர்த்தி காத்திருந்தார். அப்போது காரில் வந்த மர்ம நபர்கள், வைஷ்ணவி அழைத்து வரச் சொன்னதாக கூறி அவரை வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றனர். தென்காசி, குற்றாலம், திருத்தணி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். அவரிடம் இருந்து பணம், வீட்டு சாவிகள் மற்றும் கார் சாவியை பறித்துள்ளனர்.

மேலும் ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் இல்லை என்று கூறியதால், அவரை சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். வங்கியில் இருந்து பணம் எடுத்துத் தருவதாக ராமமூர்த்தி கூறியுள்ளார். கடந்த 18-ம் தேதி தாம்பரத்தில் உள்ள தனியார் வங்கியில் பணம் எடுப்பதுபோல உள்ளே சென்ற ராமமூர்த்தி, தாம்பரம் போலீஸாருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். போலீஸார் வந்ததும், வெளியில் நின்றிருந்த கடத்தல் கும்பல் தப்பி ஓடிவிட்டது.

இது தொடர்பாக ராமமூர்த்தி கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். குற்றவாளிகளைப் பிடிக்க தாம்பரம் துணைக் கமிஷனர் மனோகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கூடுவாஞ்சேரி அருகே பதுங்கியிருந்த வைஷ்ணவி, அய்யப்பன்தாங்கலை சேர்ந்த முத்து என்ற முத்துக்குமார் (31), இளவரசன் (23) ஆகியோரை கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE