தான் எழுதிய ‘படுகளத்தில் பாரத தேவி’ நூலை வண்ணப் பிரதியாக பதிப்பிக்க வேண்டும் என்பது தியாகி ஐ.மாயாண்டி பாரதியின் கடைசி ஆசை. பொருளாதார நெருக்கடியால் அந்த ஆசை நிறைவேறாமலேயே கண்ணை மூடிவிட்டார்.
சாமானியருக்கும் சுதந்திர வேட்கையை தூண்டும் மாயாண்டி பாரதியின் கட்டுரைகள் அடங்கிய நூல் ‘படுகளத்தில் பாரத தேவி’. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரம் புத்தகங்களை அச்சடித்து 2-ம் பதிப்பை வெளியிட்டாலும், இந்த நூலை வண்ணப் பதிப்பாக வெளியிட ஆசைப்பட்டார். இதற்காக இன்னும் சில கட்டுரைகளைச் சேர்த்து அட்டையில் சிறு மாற்றம் செய்து, கூடுதல் பக்கங்களுடன் 3-ம் பதிப்பை தயார் செய்திருக்கிறார். ஆனால், அதற்கான நிதி ஆதாரம் இல்லாததால் அச்சகத்தில் தேங்கிக் கிடக்கிறது மாயாண்டி பாரதியின் கடைசி ஆசை.
இதுகுறித்து மாயாண்டி பாரதியின் பேத்தி கலாபாரதி ‘தி இந்து’-விடம் கூறியதாவது:
சுதந்திரம் மற்றும் குடியரசு தின விழாக்களின்போது மதுரை ரேஸ் கோர்ஸில் தாத்தாதான் தேசியக் கொடி ஏற்றுவார். இந்த குடியரசு தினத்துக்கும் அவருக்கு அழைப்பு அனுப்பி இருந்தார் ஆட்சியர். எப்போது விடியும் என்று நினைத்துக் கொண்டிருந்தவர் அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்து குளிக்கப் போய்விட்டார். குளித்துவிட்டு வரும்போது தடுமாறி விழுந்ததில் தோள் பட்டை எலும்பு முறிந்துவிட்டது. அதனால் கொடியேற்றப் போகமுடியவில்லை. அத்தோடு படுத்த படுக்கையாகி விட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, ‘படுகளத்தில் பாரத தேவி’ புத்தகத்தை என் கண்ணை மூடுவதற்குள் கலரில் பார்த்துவிட வேண்டும். மதுரையில் பாரத மாதாவுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் ஆகிய இரண்டைத்தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார் தாத்தா. ‘படுகளத்தில் பாரத தேவி’ புத்தகத்தை தாத்தா காசுக்கு விற்கவில்லை. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் பொது நிகழ்ச்சிகளிலும் இலவசமாகத்தான் கொடுத்தார்.
புத்தகத்தை வண்ணப் பதிப்பில் ஆயிரம் பிரதிகள் அச்சடிக்க 40 ஆயிரம் ரூபாய் ஆகும் என்றார்கள். அவ்வளவு பணம் இல்லாததால் புத்தகத்தை வெளிக் கொண்டுவர முடியவில்லை. தாத்தாவுக்கு மத்திய அரசின் தியாகிகள் பென்ஷனும் மாநில அரசின் பத்திரிகையாளர் பென்ஷனும் சேர்த்து மொத்தம் 27,500 ரூபாய் வந்து கொண்டிருந்தது.
மருந்து செலவு, சாப்பாட்டுச் செலவு போக எஞ்சிய பணத்தை தன்னைத் தேடிவரும் இயலாதவர்களுக்கும் தாத்தா கொடுத்துவிடுவார். தீக்கதிர் மணி என்பவரின் தங்கை மகளை தனது செலவில் படிக்க வைத்துக் கொண்டிருந்தார். மதுரை அருகே நிலையூரில் தியாகிகளுக்காக இரண்டரை சென்ட் இடம் கொடுத்தது அரசு. அந்த இடத்தை தியாகிகள் நூலகம் அமைக்க இலவசமாக கொடுத்துவிட்டார் தாத்தா.
வாடிப்பட்டி அருகே தெத்தூரில் 1970-ல் தாத்தாவுக்கு அரசு கொடுத்த ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. அவரது கடைசி ஆசைப்படி அங்கே பாரதமாதா மணிமண்டபம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல, ‘படுகளத்தில் பாரத தேவி’ நூலின் வண்ணப் பதிப்பை வெளிக் கொண்டுவரவும் யாராவது உதவி செய்ய வேண்டும் என்று கண்கலங்கினார் கலாபாரதி.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago