மூளைச்சாவு: இளைஞர் உறுப்புகள் தானம் - திருச்சியில் இருந்து விமானத்தில் சென்னை வந்தன

தஞ்சாவூரில் மூளைச்சாவு அடைந்த புதுச்சேரியை சேர்ந்த இளைஞரின் உடல் உறுப்புகள் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன.

புதுச்சேரியை சேர்ந்தவர் ஜெகன்மோகன் (34). அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். கடந்த 19-ம் தேதி பணி நிமித்தமாக அவர் பேருந்தில் திருவாரூருக்கு சென்றுகொண்டிருந்தார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர் படிக்கட்டில் நின்றுகொண்டு பயணம் செய்தார். திடீரென பேருந்து திரும்பும் போது, நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் ஜெகன்மோகனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பொதுமக்கள் அவரை மீட்டு திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பின் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் ஜெகன்மோகன் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் நள்ளிரவு மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து ஜெகன்மோகனின் உறவினர்கள் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்பினர். அதன்படி, டாக்டர்கள் குழுவினர் அறுவைச் சிகிச்சை செய்து அவரது உடல் உறுப்புகளை எடுத்தனர்.

இந்நிலையில் ஜெகன்மோகனின் கல்லீரல் மற்றும் இதய வால்வை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பொருத்த திட்டமிடப்பட்டது. அதன்படி 5 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர் ஜெகன்மோகனின் கல்லீரல் மற்றும் இதய வால்வை எடுத்துக் கொண்டு திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர்.

சென்னை விமான நிலைய வளாகத்தில் தயாராக இருந்த ஒரு ஆம்புலன்ஸில் கல்லீரலுடன் ஏறிய 3 டாக்டர்கள் மேடவாக்கம் அருகே பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சிகிச்சைப் பெற்று வரும் ஒரு ஆண் நோயாளிக்கு 8 மணி நேரம் அறுவைச் சிகிச்சை செய்து கல்லீரலை பொருத்தினர். இதே போல இதய வால்வுடன் மற்றொரு ஆம்புலன்ஸில் சென்ற 2 டாக்டர்கள் முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளிக்கு இதய வால்வை பொருத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE