6 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டியது வெயில்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் நேற்று வெயில் 100 டிகிரியை தாண்டியது. மார்ச் மாதம் முடிவதற்குள்ளாகவே தமிழகத்தில் வெயில் சுட்டெரிப்பதால் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் உக்ரம் அதிகமாக இருக்கும் என்று மக்கள் கவலைப்படுகின்றனர்.

தமிழ்நாட்டில் எப்போதும்போல் வெயில் அதிகமாக இருக்கக்கூடிய மாவட்டங்களில் இந்த ஆண்டும் வெயில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று அதிகபட்சமாக வேலூரில் 102.92 டிகிரி வெயில் பதிவாகியது. இதர மாவட்டங்களான திருச்சி 102.38 டிகிரி, திருப்பத்தூர் 102.2 டிகிரி, கரூர் மற்றும் சேலம் 101.84 டிகிரி, மதுரை 100.76 டிகிரி, தருமபுரி 100.76 டிகிரி என பதிவாகியது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அதிகபட்ச வெயில் மார்ச் 30 மற்றும் 31 தேதிகளில்தான் பல மாவட்டங்களில் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டும் இப்போது பதிவாகியிருப்பதைவிட மார்ச் மாத இறுதிக்குள் வெயில் மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

தமிழ்நாட்டில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தாலும், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பரவலாக ஒருசில இடங்களில் மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் போன்றே நாட்டின் இதர சில மாநிலங்களில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE