உயர்ந்த குறிக்கோள் வெற்றியைக் கொடுக்கும்: கலசலிங்கம் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு அறிவுரை

By செய்திப்பிரிவு

உயர்ந்த குறிக்கோள் வெற்றியைக் கொடுக்கும் என்று கஸ்தூரி அன்ட் சன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ராஜீவ் சி.லோச்சன் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் அருகேயுள்ள கலசலிங்கம் பொறியியல் கல்லூரியின் 3-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தர் ஸ்ரீதரன் விழாவைத் தொடங்கிவைத்தார். பொறியியல் கல்லூரி இயக்குநர் அறிவழகி கருத்துரையாற்றினார். முதல்வர் எம்.சுப்புராஜ் ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவில், கஸ்தூரி அன்ட் சன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ராஜீவ் சி.லோச் சன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவ, மாணவிகள் 270 பேருக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது: இத்தரு ணத்தில் எனது பட்டமளிப்பு விழா நினைவுக்கு வருகிறது. உடன் படித்தவர்கள், கல்லூரித் தோழர்கள், பேராசிரியர்கள் அனைவரும் நினைவுக்கு வருகின்றனர். அது வாழ்வில் இனிமையான தருணமாகும். அப்போது, இவ்வளவு வாய்ப்புகள் இல்லை. ஆனால், இன்று நிறைய வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

பட்டம் பெறும் நீங்கள், உங்கள் கனவுகளை நனவாக்க முனைப்புடன் செயலாற்ற வேண்டும். இந்தியா வளமைமிக்க நாடு. உங்களுக்கான தேடல்கள் அனைத்தும் இங்கு கிடைக்கும். உயர்ந்த குறிக்கோளை வைத்துக்கொள்ளுங்கள். எதையும் உயர்வாகச் சிந்தியுங்கள். அது நிலவை எட்டிப் பிடிப்பதைப்போன்று இருக்க வேண்டும். உயர்ந்த எண்ணங்கள் உங்களை சிறந்த பாதையில் வழிநடத்திச் செல்லும். கடினமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள். எதுவும் எளிதாகக் கிடைத்துவிடாது. சரியான திட்டமிடுதலும் அதை நோக்கிய கடும் உழைப்புமே எதையும் சாத்தியமாக்கும்.

தவறு செய்யுங்கள். தவறுகளிலிருந்துதான் நாம் சரியானதைக் கற்றுக்கொள்ள முடியும். ஆனால், தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டுமே தவிர, செய்த தவறுகளையே மீண்டும் மீண்டும் செய்யக் கூடாது. நல்ல நட்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன் அன்பையும் மனிதாபிமானத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அது வாழ்வில் உங்களை சிறந்த இடத்துக்குக் கொண்டுசெல்லும் என்றார்.

முன்னதாக பேராசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில், துணைவேந்தர் சரவணசங்கர், பதிவாளர் வாசுதேவன், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE