ராஜீவ் கொலை வழக்கு கைதிக்கு பரோல் கேட்டு மனு: தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருப்பவரை பரோலில் விடுவிக்க கோரிய மனுவுக்கு, பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது மகன் ரவி என்ற ரவிச்சந்திரன். இவருக்கு ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 22 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் உள்ளார். இவரை சொத்து பாகப்பிரிவினை செய்வதற்காக ஒரு மாதம் பரோலில் விடுவிக்க கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்ப தாவது: எங்கள் குடும்பத்துக்கு மதுரை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் சொத்துகள் உள்ளன. இவற்றை பாகப்பிரிவினை செய்ய ரவிச்சந் திரனுக்கு 2012-ல் 15 நாள் பரோல் வழங்கப்பட்டது. அப்போது அவரை வீட்டைவிட்டு போலீஸார் வெளியே விடவில்லை. சொத்து களை பார்வையிடவும் அனுமதிக்க வில்லை. இதனால் பாகப் பிரிவினை பணி முடியவில்லை.

இந்நிலையில் ரவிச்சந்திரனை மீண்டும் பரோலில் விடுவிக்க கோரி மனு கொடுத்தோம். அப்போது ஒருமுறை பரோலில் சென்றவருக்கு, அடுத்து 2 ஆண்டுகளுக்குப் பிறகே பரோல் வழங்கப்படும் என்று கூறி நிராகரிக்கப்பட்டது. அந்த 2 ஆண்டு காலம் 10.12.2014-ல் முடிந்தது. பரோல் கேட்டு மனு கொடுத்தோம். அந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, ரவிச்சந்திரனுக்கு ஒரு மாதம் பரோல் விடுமுறை வழங்கவும், பரோல் விடுமுறை காலத்தில் சொத்து பாகப்பிரினை, பெயர் மாற்றம், சொத்துகளை பார்வையிடவும், உறவினர்கள், வழக்கறிஞர்களை ரவிச்சந்திரன் சந்திக்க அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஏ.செல்வம், டி.மதிவாணன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் லஜபதிராய் வாதிட்டார். விசாரணைக்குப் பின் இந்த மனுவுக்கு உள்துறைச் செயலர், சிறைத் துறைக் கூடுதல் டிஜிபி, மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர், விருதுநகர் எஸ்.பி., அருப்புக்கோட்டை டி.எஸ்.பி. ஆகியோர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். அடுத்த விசாரணையை ஜூன் 15-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE