அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் வேலை நிறுத்தம்: தமிழகத்தில் அஞ்சலக சேவைகள் பாதிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய அஞ்சல் ஊழியர் சம்மேளன ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தம் செய்த தால் அஞ்சல்துறை சேவைகள் பாதிக்கப்பட்டன.

தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்படுவது, அஞ்சல்துறை யில் காலியாகவுள்ள பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது, அந்நிய முதலீடு, சிபிஎஸ் தகவல் தொழில்நுட்ப சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து தேசிய அஞ்சல் ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. இந்த சம்மேளனத்தின் கீழ் 9 சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் 50 சதவீத அஞ்சல் ஊழியர்கள் நேற்றைய தினம் பணிக்கு செல்லவில்லை.

இதனால் அஞ்சல் துறையின் முக்கிய சேவைகளான கடித போக்குவரத்து, ரயில் அஞ்சல் சேவை, மணியார்டர் உள்ளிட்டவை பெருவாரியான அஞ்சலங்களில் செயல்படவில்லை. தேசிய அஞ்சல் ஊழியர்கள் சம்மேளனத்தை சாராத ஊழியர்கள் மட்டுமே பணிக்கு சென்றதால், அதிக பணிச்சுமையுடன் அவர்கள் பணி புரிந்தனர். சென்னை போன்ற மாநகர் பகுதிகள் மற்றும் நகர்ப்புற பகுதிகளைவிட கிராமப்புற பகுதிகளில் தான் வேலை நிறுத்தம் பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியது.

இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக தேசிய அஞ்சல் ஊழியர்கள் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:

இந்திய அஞ்சல் துறை வழங்கி வரும் கோர் பாங்கிங் சேவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள தொழில்நுட்ப கோளாறு காரணத்தால் அஞ்சல் ஊழியர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எங்களது பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்வது என்று கடந்த 10-ம் தேதி தொழிலாளர் ஆணையத்திடமும், அஞ்சல்துறை நிர்வாகத்திடம் மனு அளித்துதான் இப்போராட்டத்தை மேற்கொண்டோம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE