சென்னை போலீஸ் கமிஷனராக திரிபாதி மீண்டும் நியமனம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

சென்னை போலீஸ் கமிஷனராக திரிபாதியை நியமித்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கமிஷனராக இருந்த ஜார்ஜ் சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் வரும் 24-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. இதையடுத்து தமிழக காவல்துறை முழுவதும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. தேர்தலை பாகுபாடு இல்லாமல் நடத்துவதற்காக ஐஏஎஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இரு நாட்களுக்கு முன்பு காவல்துறை தலைமை இயக்குநராக அனுப் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டார். தேர்தல் தொடர்பான பணிகள் அனைத்தும் இவரது தலைமையிலேயே நடக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மற்ற பணிகளுக்கு ராமானுஜமே காவல்துறை தலைமை இயக்குநராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனரும் மாற்றப்பட்டுள்ளார். சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த திரிபாதி, புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை கமிஷனராக இருந்த ஜார்ஜ், சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல நாமக்கல் மாவட்ட எஸ்.பி.யாக சந்தோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

தற்போது கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள திரிபாதி, 2011 மே முதல் 2012 செப்டம்பர் வரை சென்னை மாநகர கமிஷனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE