மெரினா வளைவுச் சாலையை புதுப்பிக்கும் விவகாரம்: உண்மை நிலை அறிய அட்வகேட் கமிஷனர் நியமனம் - பசுமை தீர்ப்பாயம் நடவடிக்கை

மெரினா வளைவுச் சாலை பணி தொடர்பாக உண்மை நிலையை அறிய அட்வகேட் கமிஷனரை நியமித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய முதல் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் பட்டினப்பாக்கம் மற்றும் கலங்கரை விளக்கத்தை இணைக்கும் சாலையான மெரினா வளைவுச் சாலையை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணைய விதிகளை மீறி இச்சாலை அகலப்படுத்தப்படுவதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய முதல் அமர்வில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த மனு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி எம்.சொக்கலிங்கம், தொழில்நுட்பத்துறை உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அமர்வின் உத்தரவின் பேரில், சாலைப் பணிகளை 4 பேர் கொண்ட நிபுணர் குழு ஆய்வு செய்தது. இந்தக் குழுவினர் அமர்வில் நேற்று தாக்கல் செய்த அறிக்கையில் “சாலை விரிவாக்கம் செய்யப்படவில்லை. ஏற்கெனவே இருந்த 18.20 மீட்டர் அகலத்திலேயே பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அமர்வின் உறுப்பினர்கள், இச்சாலை பணி தொடர்பாக உண்மை நிலையை அறிய, கே.ஆர்.ஹரின் என்பவரை அட்வகேட் கமிஷனராக நியமித்து, உரிய ஆய்வு செய்து அடுத்த விசாரணையின் போது அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் மனு மீதான அடுத்த விசாரணையை மார்ச் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட் டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE