தொடர் கொலை மிரட்டல் எதிரொலி: சகாயத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் கூடுதல் பாதுகாப்பு

தொடர் கொலை மிரட்டல் காரணமாக சட்ட ஆணையர் சகாயத்துக்கும், அவரது அலுவலகத்துக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் கூடுதலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகள் குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விசாரணை நடத்திவருகிறார். அவருக்கு ஏற்கெனவே ஈரோட்டில் இருந்து கொலை மிரட்டல் வந்தது. அதைத் தொடர்ந்து சகாயத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

கடந்த வாரம் 9-ம் கட்ட விசாரணை நடத்தியபோது சென்னையில் இருந்து வந்த மிரட்டல் கடிதத்தில், ‘கிரானைட் விசாரணையில் உண்மையான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் கொலை செய்வோம்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த இரு மிரட்டல்கள் குறித்தும் மதுரை தல்லாகுளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், குவாரிகளில் ஆய்வுப் பணியில் ஈடுபட்ட சகாயம் குழுவைச் சேர்ந்த அலுவலர்களை கண்காணிப்பது, மிரட்டும் பாணியில் சிலர் வந்து செல்வது ஆகிய சம்பவங்களும் நடைபெற்றதாக தகவல் வந்தது. இதையடுத்து விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ், ஜி.கே.வாசன் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் சகாயத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து, சென்னையில் இருந்து விமானம் மூலம் சகாயம் நேற்று மதுரை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் இருந்தே போலீஸார் கூடுதல் பாதுகாப்பு அளித்தனர்.

இதுவரை சகாயத்துடன் காரில் ஒரு காவலர் மட்டும் சென்றார். இனிமேல் சகாயம் காருக்கு முன் போலீஸ் வாகனம் நிரந்தரமாகச் செல்லவும், அதில் துப்பாக்கி ஏந்திய 2 காவலர்கள் உட்பட மொத்தம் 7 பேர் பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் சகாயத்தின் மதுரை அலுவலகம் முன்பும் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். விசாரணைக்கு வருபவர்கள் போலீஸ் சோதனைக்கு பின்னரே அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதைத் தொடர்ந்து 10-ம் கட்ட விசாரணையை சகாயம் நேற்று தொடங்கினார். கிரானைட் குவாரிகளில் விபத்தில் சிக்கிய பலர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த மருத்துவமனை அலுவலர் களிடமும் சகாயம் நேற்று விசாரணை நடத்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE