டிராபிக் ராமசாமிக்கு ஜாமீன்: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சமூக சேவகர் டிராபிக் ராமசாமிக்கு ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 10-ம் தேதி சென்னை புரசைவாக்கம் டாக்டர் அழகப்பா சாலை அருகே நின்று போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு டிராபிக் ராமசாமி பேட்டி அளித்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த வேப்பேரியைச் சேர்ந்த வீரமணி என்பவருக்கும், டிராபிக் ராமசாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து வீரமணி கொடுத்த புகாரின்பேரில், டிராபிக் ராமசாமி மீது கொலை மிரட்டல், அவதூறாக பேசுதல், காரை தாக்குதல் என 4 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், தி.நகர் அருகே பாண்டிபஜாரில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த டிராபிக் ராமசாமியை, கடந்த 12-ம் தேதி அதிகாலையில் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். உடல்நலக்குறைவு ஏற்படவே, அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு டிராபிக் ராமசாமி மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டிராபிக் ராமசாமி கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அமைப்பினரும், தனிநபர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜாமீன் கேட்டு டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனு, எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முருகன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, வாரம் ஒருமுறை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE