பொய்த்துப் போன சாணக்யாவின் கணிப்பு

விலங்குகளையும், பிராணிகளை யும் கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறப் போகும் அணியை கணிக்கும் ஜோதிடம், உலகளவில் பிரபலமாக இருக்கிறது.

2011- ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பால் என்று அழைக்கப்பட்ட ஆக்டோபஸ் வெற்றி பெறப்போகும் அணியை 85 சதவீதம் சரியாகக் கணித்து, கால்பந்து ரசிகர்களை கவர்ந்தது.

இதைத் தொடர்ந்து ஒட்டகம், யானை, கடல் ஆமை, பன்றிக் குட்டி, கங்காரு என்று பல்வேறு விலங்குகள் விளையாட்டுப் போட்டிகளின் முடிவைச் சரியாக கணித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தின. இந்நிலையில் சென்னை அண்ணாநகரில் உள்ள ஐ.சி.டபிள்யூ.ஓ எனும் இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனத்தினர் வளர்த்த ‘சாணக்யா’ என்ற மீன் இந்த உலகக் கோப்பையில் ஜோதிடராக மாறியுள்ளது.

இலங்கை - தென் ஆப்பிரிக்கா, இந்தியா - வங்கதேசம், பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து - மே. இ. தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டிகளின் முடிவைச் சரியாக சொல்லி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது சாணக்யா. ஆனால் யார் கண் பட்டதோ, அரையிறுதிப் போட்டியில் மட்டும் அதன் கணிப்பு தவறாகப் போய்விட்டது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாட்டின் கொடிகளைத் தாங்கிய அட்டைகளைத் தண்ணீரில் விட, இந்தியக் கொடி இருந்த அட் டையைக் கவ்விப் பிடித்து இந்தியா தான் ஜெயிக்கும் என்று ஆரூடம் சொல்லியிருந்தது சாணக்யா. ஆனால் அதற்கு நேர்மாறாக ஆஸ்திரேலியா ஜெயித்துவிட்டது.

சாணக்யாவின் தவறான கணிப்புக்காக வருத்தம் தெரிவித்துள்ள ஐ.சி.டபிள்யூ.ஓ நிறுவனர் ஹரிஹரன், “உலகக் கோப்பைப் போட்டிகளின் வெற்றி தோல்விகளை சாணக்யா மீனின் மூலம் கணித்து, தண்ணீர் வளத்தைக் காக்க வேண்டும் என்ற கருத்தை சமுதாயத்துக்குத் தெரிவிக்கவே இதைச் செய்தோம்” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் உலகக் கோப்பை களேபரங்கள் எதையும் அறியாத சாணக்யா, வழக்கம் போல் தொட்டிக்குள்ளேயே நீந்திக் கொண்டிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE