புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்

புதுச்சேரி சட்டப்பேரவையில் மூன்று மாத செலவினமான ரூ.1483 கோடிக்கு ஒப்புதல் நேற்று பெறப்பட்டது. முழு பட்ஜெட் தாக்கல் செய்தாததை கண்டித்து அதிமுகவினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) அஜய்குமார் சிங் உரையாற்றினார். இதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்த பின் பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

மத்திய அரசு புதுச்சேரிக்கு நிதி ஒதுக்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் பட்ஜெட் தாக்கல் முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அரசு செலவினங்களுக்கு பேரவையின் ஒப்புதலை பெறுவதற்காக நேற்று மீண்டும் சட்டப்பேரவை கூட்டப்பட்டது. காலை 9.30 மணிக்கு பேரவை கூடியது.

தொடர்ந்து மசோதாக்கள் வாசிக் கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு செலவினத்தொகையான ரூ.1483.33 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்டது. அது இடைக்கால பட்ஜெட் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பேரவை கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. பதில் தராமல் அவை ஒத்தி வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் சபாபதி ஆகியோர் சமாதானப்படுத்தினர். இதையடுத்து போராட்டத்தை விலக்கிக்கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE