காற்றாடி மாஞ்சா நூல் அறுத்ததில் 4 வயது சிறுவனின் கண்ணுக்கு கீழே காயம்: பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது

By செய்திப்பிரிவு

காற்றாடி மாஞ்சா நூல் அறுத்ததில் 4 வயது சிறுவனின் முகத்தில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தேனாம்பேட்டை ராமலிங்கேஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர் பூபதி. டெய்லர் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி. இவர்களின் ஒரே மகன் பவித்ரன் (4). கோபாலபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். கடந்த 15-ம் தேதி சிறுவன் பவித்ரனை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு எல்டாம்ஸ் சாலை சுப்பிரமணியசாமி கோயில் தெரு வழியாக சித்தப்பா அருண் சென்றார்.

அப்போது பறந்து வந்த காற்றாடி மாஞ்சா நூல் பைக் முன்னால் அமர்ந்திருந்த சிறுவனின் தலையில் விழுந்தது. பைக் ஓட்டிக்கொண்டிருந்த அருண் நூலை சிறுவனின் தலையில் இருந்து எடுக்க முயன்றார். அதற்குள் காற்றாடி விட்டுக்கொண்டிருந்தவர் நூலை பிடித்து வேகமாக இழுத்ததால் மாஞ்சா நூல் சிறுவனின் மூக்கு மற்றும் கண்ணுக்கு கீழ் பகுதியை அறுத்தது.

இதையடுத்து ரத்தம் சொட்டச் சொட்ட சிறுவனை தூக்கிக் கொண்டு சென்று, மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். டாக்டர்கள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து சிறுவனை குணப்படுத்தினர்.

கடந்த 21-ம் தேதி சிறுவன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சிறுவனின் காயம் குணமடைந்தாலும், மூக்கு மற்றும் கண்ணுக்கு கீழே தழும்பு இருக்கிறது. மாஞ்சா நூலால் மகனுக்கு ஏற்பட்ட விபத்தை நினைத்து பெற்றோர் மனவேதனையில் இருக்கின்றனர்.

தடையை மீறி மாஞ்சா நூலில் காற்றாடி விட்ட நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE