இன்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்: மக்கள் தொகைக்கேற்ப கழிப்பிடங்கள் அமைக்கப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு

By ச.கார்த்திகேயன்

சென்னையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள மாநகராட்சி பட்ஜெட்டில் மக்கள் தொகைக்கேற்ப கழிப்பிடங்களை அமைப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011-ன்படி சென்னையில் 72 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். மேலும் வெளியூரில் இருந்து கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு பணிகள் நிமித்தமாக வந்து செல்வோர் உட்பட சென்னையில் தினமும் சுமார் 1 கோடி பேர் சுற்றி வருகின்றனர். இத்தனை பேருக்கு தேவையான கழிப்பிட வசதிகள் சென்னையில் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை.

போதிய கழிப்பிடங்கள் இல்லாததால் திறந்த வெளியில் பொதுமக்கள் இயற்கை உபாதை களை கழிப்பதும், அதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதும் சென்னையில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. வடசென்னையில் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது. இது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்விலும் வழக்கு ஒன்று விசாரணையில் உள்ளது. இது தொடர்பாக வியாசர் பாடியைச் சேர்ந்த தேவை இயக்கத்தின் தலைவர் இளங்கோ கூறியிருப்பதாவது:

சென்னையில் பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்றவாறு கழிப்பிடங்கள் அமைக்கப்படவில்லை. சென்னையில் மொத்தம் 860 கழிப்பிடங்கள் உள்ளன. 50 சதவீதம் போதிய பராமரிப்பின்றி கிடக்கிறது. மக்கள்தொகைக்கு ஏற்ப கழிப்பிடங்கள் அமைப்பது தொடர்பாக மாநகராட்சியிடம் கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து 8 மனுக்களை கொடுத்திருக்கிறேன். 8-வது மனுவுக்கு கடந்த 2015 ஜனவரியில் பதில் கிடைத்தது.

மக்கள் அதிகம் கூடும் இடங்களாக 348 இடங்கள் கண்டறியப்பட்டிருப்பதாகவும், அதில் 41 இடங்களில் பணிகள் முடிந்திருப்பதாகவும், 35 இடங்களில் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மற்ற இடங்களில் அந்தந்த மண்டல அலுவலகங்கள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் 2012-13 நிதிநிலை அறிக்கையில் தேவைக்கேற்ப கழிப்பிடங்கள் கட்டப்படும் என்று அறிவிக்கப் பட்டது. 2013-14 நிதிநிலை அறிக்கையில் மாநகராட்சியில் உள்ள கழிப்பிடங்களில் கள ஆய்வு செய்து, பழுது நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 2014-15

நிதிநிலை அறிக்கையில் கழிப்பிடம் தொடர்பாக எந்த அறிவிப்பும் வரவில்லை. இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையிலாவது மக்கள்தொகைக்கேற்ப கழிப்பிடங்கள் அமைப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE