ஏடிஎம் ரகசிய எண்ணைப் பெற்று பேராசிரியர் அப்துல்காதரிடம் ஆன்லைனில் ரூ.1 லட்சம் மோசடி: வாணியம்பாடி போலீஸார் விசாரணை

By செய்திப்பிரிவு

பேராசிரியர் அப்துல்காதர் மற்றும் அவரது மனைவியின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் பணத்தை ஆன் லைன் மூலம் திருடிய மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:

வாணியம்பாடி நியூ டவுன் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் காதர். ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியரான இவர், தமிழகத்தின் மிகச் சிறந்த பேச்சாளர்களுள் ஒருவர். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

கடந்த 15-ம் தேதி காலை அப்துல்காதரின் செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்ம நபர், மும்பை வங்கியில் இருந்து பேசுவதாகவும் வங்கிப் பணத்தை எடுக்க பயன்படுத்தப்படும் ஏடிஎம் கார்டு தேதி காலாவதியாகிவிட்டதால், புதிய கார்டு ஒன்றை அனுப்பியுள்ள தால் பழைய ஏடிஎம் கார்டின் குறியீட்டு எண்ணை (பாஸ்வேர்டு) கேட்டுள்ளார்.

இதை நம்பிய அப்துல்காதர், தனது ஏடிஎம் கார்ட்டின் ரகசியக் குறியீட்டு எண்ணை அந்த நபருக்கு கூறியுள்ளார். அதேபோல், அப்துல் காதரின் மனைவி சல்மாபேகத்தின் ஏடிஎம் கார்டின் ரகசிய எண்ணையும் அந்த நபரிடம் அப்துல்காதர் தெரிவித்ததாகத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து, அந்த நபர், புதிய கார்டு ஓரிரு நாட்களில் வீட்டின் முகவரிக்கு வந்து சேரும், புதிய கார்டை பெற்றதும் அதில் இணைக்கப்பட்டுள்ள புதிய ரகசிய குறியீட்டு எண்ணை இனி பயன்படுத்திக் கொள்ளவும். சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள வங்கிக் கிளை மேலாளரை அணுகவும் எனக் கூறிவிட்டு தொலைபேசி தொடர்பைத் துண்டித்துக் கொண்டார்.

இதற்கிடையே, நேற்று காலை அப்துல்காதரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. அதில், ரூ.30 ஆயிரத்துக்கு ஆன் லைன் முறையில் பொருட்கள் வாங்கிய தாகவும், அவரது மனைவி சல்மாபேகம் வங்கி கணக்கில் இருந்து ரூ.70 ஆயிரத்துக்கு ஆன்லைனில் பொருட்கள் வாங்கிய தாகவும் பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அப்துல்காதர், வாணியம்பாடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். டிஎஸ்பி மாணிக்கத்தின் உத்தரவின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE